காதலை தடுக்கும் அவசர சட்டத்துக்கு நடிகர்சித்தார்த் எதிர்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம் 2020 என்கிற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, “நேர்மையற்ற” முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தச் சட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும் வழக்கம்போல் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பதிவுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்களைக் கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கம்.

தற்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். புதிய சட்டத்தின்படி, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். முறையான விசாரணைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,ஒரு கற்பனை உரையாடலைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘அப்பா, நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று மகள் சொல்ல, உடனே தந்தை, ‘அவன் நம் சமூகத்தைச் சேர்ந்தவனா?’ என்று கேட்கிறார். மகள், இல்லை என்கிறார். அதற்கு தந்தை, ‘பரவாயில்லை. முதிர்ந்தவனாக நான் உனது காதலை மதிக்கிறேன். உனக்கு என் ஆசிகள். ஆனால், நாம் மாவட்ட நீதிபதியிடம் சென்று அனுமதி பெற வேண்டும். ஒரு வாடகை வாகனத்தைக் கூப்பிடு’ என்று பதிவு செய்துள்ள சித்தார்த், அதற்கு கீழே, ‘புதிய இந்தியா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சித்தார்த் கூறுகையில், ‘என்ன தைரியம் இருந்தால் வயதுக்கு வந்த ஒரு பெண், தான் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? எப்படிச் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்பார்? எப்படி ஒருவரைக் காதலிப்பார்? அவர்கள் சட்டத்தின்படி யாருக்கும், எதை செய்யவும் உரிமை இருக்கக்கூடாது. எதையும் சாப்பிடவோ, பேசவோ, பாடவோ, எழுதவோ, படிக்கவோ, எவரையும் திருமணம் செய்துகொள்ளவோ எதற்கும் உரிமை கிடையாது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே தெளிவாகச் சொல்வார்கள்’ என்று கோபமாகப் பதிவிட்டுள்ளார்.அவருடையஇந்தப்பதிவுகளுக்குஆதரவு பெருகி வருகிறது.