T.ராஜேந்தர் மீது நடவடிக்கை – சிலம்பரசனிடம் விசாரணை

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது.

டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பொறுப்பேற்றவுடன் முதன்முறை நேற்று ( டிசம்பர் 7 ) செயற்குழுக் கூட்டம் நடந்தது.

நவம்பர் 22 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் தலைவர் முரளி தலைமையில் செயற்குழுக் கூட்டம் (07.12.2020) அன்று மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…

1.விபிஎஃப் கட்டணம் சம்பந்தமாக சரியான முடிவை டிஜிட்டல் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்றால் 9.12.2020 கியூப் நிறுவனம் முன் ஆர்பாட்டம் நடத்துவது.

2.கடந்த காலங்களைப் போன்று சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது.

3. ஆன்லைன் டிக்கட் வசதியுள்ள திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படம் வழங்குவது.

4. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினராகச் சேருவதற்கு செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணம் 3 இலட்சத்தை 1.50 இலட்சமாகக் குறைப்பது.

5. தமிழ்ப் படங்களின் வேற்றுமொழி உரிமைகள் விற்பனை செய்யும்போது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.

6. தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கத்தினைத் தயாரிப்பாளர்கள் சங்க முகவரிக்கு மாறுதல் செய்து சங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பணிகளைத் தொடங்குவது.

7. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 25 வருடங்கள் உறுப்பினர்களாக தொடர்ந்து சந்தா செலுத்தியவர்களுக்கு சந்தா தொடர்ந்து கட்டுவதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது.

8. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராகவும், உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசி வரும் உறுப்பினர்கள் மீதும், போட்டி சங்கம் தொடங்கியிருக்கும் டி.ராஜேந்தர், கே.ராஜன்,ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுபாஷ் சந்திரபோஸ்,பி.டி.செல்வகுமார்,ஆர்.சிங்கார வடிவேலன், வை.ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோர் மீது சங்க விதிகளின்படி நடவடிக்கை எடுப்பது.

9.சங்க சட்டவிதி 16 திருத்தம் செய்து இணைச் செயலாளர் பதவியை உருவாக்குவது.

10. சினிமா துறைசார்ந்த பிற சங்கங்களில் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு போட்டியிட இயலாது.

11. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிலம்பரசன் மீது கொடுத்த புகார் சம்பந்தமாக அவரை அழைத்து விசாரிப்பது.

12. கோட்டபடி ராஜேஷ் அவர்களை இணைச் செயலாளராக நியமிக்க செயற்குழு ஏகமனதாக ஒப்புதல் வழங்கியது.

13.சங்க நிர்வாகம் சம்பந்தமாக பல்வேறு குழுக்களை அமைத்து அதற்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய நிர்வாகிகளுக்கு செயற்குழு அனுமதி வழங்கியது.

செயற்குழுகூட்டத்தில் செயலாளர் மன்னன் தவிர்த்து அனைத்து நிர்வாகிகளும், 18 செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழுவிலேயே டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை, சிம்புவை அழைத்து விசாரணை, தோற்றுப்போன கோட்டபாடி ராஜேஷுக்கு இணைச்செயலாளர் பதவி ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.