கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து,
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.

கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கமலின் 232 ஆவது படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதேபெயரில் 1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ஒரு படம் வெளியானது. கமலின் ஒரு கோடி ரூபாய் கனவு என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தில்தான் முதன்முறையாக கணினி பயன்படுத்தப்பட்டது.

இந்தப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். இப்படத்தைத் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிப்படமாக உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.

அதற்காக ஒவ்வொரு மொழியிலும் புகழ்பெற்ற நடிகர்களை இந்தப்படத்தில் நடிக்க வைக்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இதில் முதல்வெற்றியாக மலையாள இளம்நடிகர் பகத்ஃபாசில் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அவர் வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.