திடீர் மாரடைப்பால் இன்று காலை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நகைச்சுவை நடிகர் விவேக். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது பல தரப்பினரிடையேயும், சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் உடல் நிலை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். மருத்துவர்கள் கூறுகையில் “இன்று காலை மருத்துவமனைக்கு விவேக் குடும்பத்தினர் சுயநினைவின்றி அவரை அழைத்து வந்தனர். உடனடியாக எமெர்ஜென்சி குழுவும், இருதயநோய் மருத்துவ குழுவும் அவசர உதவி செய்து, விவேக்கின் இதயத் துடிப்பைக் கொண்டு வர போராடினார்கள். அதன்பிறகு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து ரத்த குழாயிலிருந்த அடைப்பை சரி செய்தார்கள். இடதுபுற ரத்த குழாயிலிருந்த அடைப்பைச் சரி செய்த பின்புதான், இதயத்துடிப்பு வந்தது.
தற்போது ஐசியுவில், எக்மோ சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த 24 மணி நேரத்துக்கு, ஐசியு பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக் குறைவுக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவருக்கு முதல் அட்டாக் என்றாலும், சிவியராக உள்ளது. எங்கள் மருத்துவமனையில் 45 முதல் 95 வயது வரை 10000 பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம், யாருக்கும் இதுபோன்று வந்ததில்லை” என்று தெரிவித்தனர்.
இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது என்றும் அவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.சுகாதாரத் துறை செயலாளர் கூறுகையில், “விவேக் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் அவருக்கு ரத்த அழுத்தம் எல்லாம் சரியாக இருக்கிறது. நேற்று தாமாக முன்வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் போட்டுக்கொண்ட மருத்துவமனையில் நேற்று மட்டும் 800க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தற்போது தடுப்பூசி பற்றி பேச வேண்டிய நேரம் இல்லை. விவேக் இதய நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அவரின் சிரித்த முகம் தான் நினைவுக்கு வருகிறது. நான் மன வேதனையில் இருக்கிறேன். மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படக் கூடியது அல்ல” என்று தெரிவித்தார்.இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள், ரசிகர்கள் வரை அனைவரும் விவேக் குணம் பெறப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.நடிகர் விவேக் மாரடைப்புகாரணமாகமருத்துவமனையி
அதுபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், விவேக் நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்துவர வேண்டும் என கூறியுள்ளார்
விவேக் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்துக் கேட்டறிந்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.இதுபோன்று வைரமுத்து, கஸ்தூரி என திரை பிரபலங்களும் பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் getwellsoon #vivek என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.