‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு…

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது:
‘அன்பில் அவன்’ படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலிருந்து வார இறுதி நாட்களில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. உங்கள் ஆதரவுதான் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர், மகா, ஆகாஷ், பிரவீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எழுத்தாளர் விக்னேஷ், இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, எடிட்டர் செல்வா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் உருவாக்கத்தில் துணை நின்ற நிர்வாகத் தயாரிப்பாளர் சேது, PRO யுவராஜ், விளம்பர மற்றும் டிஜிட்டல் குழுவினர், விநியோகஸ்தர்களான ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவும் இந்தப் படத்தின் பயணத்தில் முக்கியமானது.
‘அன்பில் அவன்’ படத்தைப் பற்றிய நல்ல கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன; தெலுங்கிலும் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் படத்துக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது..,
ரசிகர்கள் படத்துடன் உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திக்கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், நாம் உருவாக்கிய படம் மக்களிடம் சரியாகச் சென்றடைவதும் முக்கியம். ‘அன்பில் அவன்’ படத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்கின்றன. குறிப்பாக, குடும்பத்தை நேசிக்கும் ஆண்களைப் பற்றியும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் ரசிகர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் எங்களை நெகிழச் செய்கின்றன.
என் வாழ்க்கையில் என் தந்தை எனக்கு வழிகாட்டியதைப் போல, சினிமாவில் அசோக் அண்ணா எனக்கு வழிகாட்டியிருக்கிறார். நான் எழுதிய முதல் திரைக்கதையை அவரிடம் கொடுத்தபோது, அதை வாசித்துவிட்டு மறுநாளே மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் பயணிப்பதற்கான பாதையை உருவாக்கித் தருகிறார். நான் கேட்டதைவிட அதிகமாகவே இந்தப் படத்திற்காகச் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதையும், அவருடைய வெற்றிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததையும் பெருமையாகக் கருதுகிறேன்.
 நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன் பேசியதாவது:
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்‌ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
படம் வெளியானது முதல் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
Comments (0)
Add Comment