சிட்டுக் குறிஞ்சி இசை வெளியீட்டு விழா தொகுப்பு

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் கலந்துகொண்டார்.
இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் பேசுகையில்,
தனது கல்லூரி நாட்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி தன்னை இயக்குவதாகக் குறிப்பிட்டார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களும் போராட்டங்களும் நிறைந்ததாக இருந்ததாகத் தெரிவித்தார். படத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பயணத்தை ஊடகங்களின் ஆதரவுடன்தான் கடக்க முடியும் என்றும் கூறி, அனைவரின் பேராதரவையும் கேட்டுக்கொண்டார்.
ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் பேசுகையில்,
‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் காதல், ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் அம்சங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். 1983 மற்றும் 2025 போன்ற காலக்கட்டங்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். படத்தின் திரைக்கதை அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும், படத்தொகுப்புப் பணிகளை மகேந்திரன் கணேசனும், இசைப் பணிகளை மாராவும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று கூறி, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மூத்த நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில்,
பெரிய திரைப்படங்களின் விளம்பரங்கள் எளிதில் மக்களைச் சென்றடையும் நிலையில், சிறிய திரைப்படங்களை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் மற்றும் படக்குழுவினர் பல்வேறு சவால்களைக் கடந்து இப்படத்தை உருவாக்கியுள்ள தைரியத்தைப் பாராட்டினார். சிறிய திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவை வெற்றிகரமாக ஓடுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் டா ஜூட் அனந்த் ஆகியோரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் மாரா
 பேசுகையில்,
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா போன்ற உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய மற்றும் அரிய வாய்ப்பு என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். படக்குழுவினரின் கடின உழைப்பைப் பாராட்டிய அவர், இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர்  டி. ஜூட் ஆனந்த் பேசுகையில்,
இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார். அந்தச் சூழலில் உதவியாக இருந்த ஏ.வி. சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ராஜேஷ், அனகாபுத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ். செந்தில் மற்றும் திரு. பீட்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரத்தின் கதையும், பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்துப் படமாக்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Comments (0)
Add Comment