பெண்ணை ஆண் புரிந்துகொள்ளும்வரைக்கும் கலை இருக்கும்”: வைரமுத்து பேச்சு
செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய காந்திகிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, “இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்துகொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல்.
இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையது ஆகாத புதிய கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம். இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்துகொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்துகொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். பெண் ஆணை புரிந்துகொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்துகொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.
திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது. பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்கவேண்டும். தொடர்ந்து வெற்றிபெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்” என்றார்.