மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 27.02.2026 ஆம் தேதி நடைபெற்றது.
‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில்,
” நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டை பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ… அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள் தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ -காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் தொடர்பு கொண்டிருக்கிறோம். 18 ஆண்டு காலம் நமக்காக வாழ்ந்து இறக்கிறது. இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்
.