டூரிஸ்ட் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

இலங்கைதமிழர்கள் நாட்டைவிட்டு ஏதிலிகளாகத் தமிழ்நாடு வருவது நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரம்.அந்தப் பெருந்துயரின் சிறு துளியைத் திரையில் பதிவு செய்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

நாயகன் சசிகுமார், அவர் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் இலங்கையில் இருந்துராமேசுவரம் வருகின்றனர். அங்கிருந்து சென்னை வந்து தங்கள் அடையாளத்தை மறைத்து வசிக்கின்றனர். அவர்கள் வந்த நாளில் ராமேசுவரத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் சசிகுமார் குடும்பத்துக்குத் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி அவர்களை தேடுகிறது காவல்துறை.இந்தக் குற்றச்சாட்டிலிருந்து சசிகுமார் குடும்பம் தப்பியதா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இலங்கைதமிழராக நடித்திருக்கும் சசிகுமார் அதற்கேற்ற பேச்சு உடல்மொழி ஆகியனவற்றிற்காக மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.அந்தக் கதாபாத்திரம் தாண்டி சசிகுமார் என்கிற நடிகரின் பிம்பமும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

சசிகுமார் மனைவியாக நடித்திருக்கிறார்சிம்ரன். அவரை நடிக்க வைத்ததால் அவர் நடனமாடிய பழைய பாடல் ஒன்றைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சசிகுமாரின் மூத்தமகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஆகிய இருவரும் பருவவயதினரின் மனநிலையையும் அப்பாவிச்சிறுவர்களின் எண்ணங்களையும் பிரதிபலித்திருக்கின்றனர்.

யோகிபாபு கதாபாத்திரம் மூலம் இலங்கைதமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, அவலங்களை காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.

எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி ஆகியோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கிறது.அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்குத் தக்க அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் பரத்விக்ரமனின் உழைப்பில் படம் தொய்வின்றி நகர்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் அபிசன் ஜீவிந்த், இலங்கைதமிழர்கள் தங்களது பூர்வீகதாயகம் என்று வரும் தமிழ்நாட்டில் அதிகார வர்க்கத்தினரால் எதிர்கொள்ளும் சிக்கல்களை நகைச்சுவையாகச் சொல்லி கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறார்.

அதிகார வர்க்கம் எப்படியிருந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனம் எப்போதும் இலங்கைதமிழர்கள் பக்கம் நிற்கும் என்கிற உண்மையை உரத்துச் சொல்லியிருக்கிறார்.
Comments (0)
Add Comment