பரபரப்பூட்டும் காட்சிகளில்”அனோமி” திரைப்பட விமர்சனம்

பொது சமூகத்தில் தங்களை கைவிடப்பட்டவர்களாக எண்ணுகின்ற தனி மனிதர்களை” அனோமி” என குறிப்பிடுகின்றனர். அந்த பெயரில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
மனதளவில் பலவீனமான மூன்று பேர் அடுத்தடுத்து தொடர்ந்து மரணமடைகிறார்கள்.அது தற்கொலை என்று காவல் துறை முடிவு செய்கிறது. ஆனால் தற்கொலை இல்லை என்கின்ற சந்தேகத்துடன் கதையின் நாயகி தன் தம்பி மரணத்தின் உண்மை அறிய தொடங்கும் முயற்சிகளே” அனோமி” படத்தின் திரைக்கதை.

இந்தக்கதையின் நாயகி பாவனா, தடவியல் நிபுணர்.சாலை விபத்தொன்றில் தனது பெற்றோரை இழக்கிறார்.அந்தவிபத்தில் உயிர் பிழைத்த அவரது தம்பி மனரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அவரைக் காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில்,பாவனாவின் தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.சிலதினங்களில் அதேமுறையில் பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.இவை இரண்டுமே கொலை என்று பாவனா சொல்கிறார்.காவல்துறை மறுக்கிறது.அதனால் உண்மை அறிய தாமே களத்தில் இறங்குகிறார் பாவனா.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறு திரைக்கதையில் பயணிக்கிறதுபடம்.

தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா,அதற்கேற்ற முதிர்ச்சியைக் கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு மில்லிமீட்டரையும் துல்லியமாக ஆராய்ந்து அவர் திரட்டும் தடயங்கள், அவற்றின் மூலம் கொலையாளியை அவர் நெருங்கும் விதம் ஆகிய எல்லா இடங்களிலும் மிகப் பொருத்தமாக நடித்து அந்த வேடத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக ரகுமான் அதற்குரிய மிடுக்குடன் நடித்திருக்கின்றார்.
பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன்,காதலன் அர்ஜுன்லால் மற்றும் பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா ஆகிய நடிகர்கள் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.அவர்கள் நடிப்பும் அளவாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்,திரைக்கதையில் சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் காட்சியில் சொல்லி வெற்றிபெற்றிருக்கிறார்.

ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதையோடு இசைந்திருக்கிறது.பின்னணி இசையில் நெஞ்சாங்கூட்டை அதிரவைக்கிறார்.

படத்தொகுப்பாளர் கிரியன் தாஸ்,தொடக்கத்திலேயே கதைக்குள் அழைத்துச் சென்று கடைசிவரை படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் ரியாஸ் மராத்.இதுபோன்ற கதைகளில் மாறுபட்டிருப்பது கொலைக்கான காரணம் தான்.அதை முற்றிலும் வித்தியாசமாக யோசித்து அதற்கேற்ப திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்.

 

Comments (0)
Add Comment