பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios ) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
‘பைசன் காளமாடன்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘மக்கள் காவலன்’.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு ஆக்க்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு… அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது… மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத… ஒரு தலைவராக மாற வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது. போராட்டம் தீவிரம் அடையும் போது.. அதற்கான விலையும் அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது. தனது பிறப்பு சூழலோ… அல்லது தன்னை சுற்றியுள்ள தடைகளோ… தனது லட்சியத்தின் எல்லையை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே.. இப்படத்தின் மையப் பொருளாகும். உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்… அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்… இத்திரைப்படம் அழுத்தமாக பேசுகிறது.
இந்த திரைப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா ,ஜென்சன் திவாகர், லல்லு , ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மோசஸ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்திருக்கிறார். சண்டை பயிற்சியை டான் அசோக் – ஒலி வடிவமைப்பினை ஆண்டனி ஜெயரூபன் – ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார்- ஒப்பனையை ராமச்சந்திரன் – ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
*