மனதை மயிலிறகால் வருடும் ஹபீபி

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு சென்னையில் 18.05.2026 மாலைநடைபெற்றது.

நிகழ்வில்நடிகர் பார்த்திபன் பேசியதாவது,

“‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் ‘ஹபீபி’ திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக ‘ஹபீபி’ இருக்கும். எனக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார் என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா,

“மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகிற போது

“வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி.  படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது” என்ற

இயக்குநர் மீரா கதிரவன்,

“படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”. என்றார்.

Comments (0)
Add Comment