விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம்
‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்தப்படம்.
‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கே தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்தப்படத்தை மறுவெளியீடு செய்கிறார்
இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு ஆகஸ்ட்8 மாலை இந்தப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான்,மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏசந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார்,விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ்,
பேரரசு,எழில்,லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு,அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில்,இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசும்போது….,
எனக்கு அரசியல் மீது,சமுதாயத்தின் மீது இருக்கும் கோபங்களை எல்லாம் கொட்ட வேண்டும்.அதை திரைப்படத்தின் மூலம்தான் கொட்ட வேண்டும்.அப்படி எனக்குக் கிடைத்த பவர்ஃபுல்ஹீரோ தான் விஜயகாந்த். வேறு எந்த ஹீரோவையும் நான் தேடிப்போகவில்லை..
ஒரு காலகட்டத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பயங்கர வெற்றிகளைக் கொடுத்தார்கள்.ஆனால் பெரிய செலவு வைக்கிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் பயந்து விட்டார்கள்.
திரைப்படக்கல்லூரி படித்த மாணவர்களில் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தவர்கள் என்றால் ஆர்.கே. செல்வமணி,
ஆர்.வி உதயகுமார் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். கேப்டன் பிரபாகரன் படம் வெளியானபொழுது எப்படி ஓடியதோ அதேபோல இப்போதும் வெற்றிகரமாக ஓடும்.
விஜயகாந்த் மற்ற இயக்குநர்களை எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்.என்னை மட்டும் டைரக்டர் சார் என்று சொல்வார்.
இதுதான் மரியாதை,நன்றி,நன்றி என்றால் விஜயகாந்த் என்று அர்த்தம்.
மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்.சட்டம் ஒரு இருட்டறை படத்தில் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ அதன்பிறகு அவருடன் 18 வது படம் பெரியண்ணா இயக்கியபோதும் அதேபோல தான் என்னிடம் மரியாதை வைத்திருந்தார்.
என்னுடைய மகன் விஜய்யின் முதல்படம் நாளைய தீர்ப்பு.70 இலட்சம் செலவு செய்து எடுத்து சரியாகப் போகவில்லை. ஆனால் நடிகராக வந்துவிட்டார்.அவரை எப்படியாவது நான் வளர்த்துவிட வேண்டும் அதற்காக ஒரு பெரியநடிகருடன் அவரை நடிக்க வைக்க விரும்பினேன்.
எந்த பெரிய நடிகரும் ஒத்துக்
கொள்ளவில்லை அப்போது விஜயகாந்த் தம்பியாக
விஜய் நடிக்கும் விதமாக ஒரு கதை இருக்கிறது அப்படி நடித்தால் விஜய்க்கு அது உதவியாக இருக்கும் என்று விஜயகாந்திடம் கேட்டேன்.உடனே எப்போது
கால்சீட் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இவரை வைத்து நான் இயக்கிய 18 படங்களிலும் நான்தான் அவருக்கு டேட் சொல்லி இருக்கிறேன்.
செந்தூர பாண்டியில் அவரை
வைத்து 17 நாள் சூட்டிங் நடந்தது.
செந்தூரப்பாண்டி முடித்ததும் வியாபாரம் சூப்பராக நடந்தது.மிகப்பெரிய லாபம் வந்தது. ஆனால் ஒருபைசா கூட பணம் வாங்க மறுத்து விட்டார் அப்போது அவர் வீட்டு அருகில் இருந்த என்னுடைய காலிஇடத்தை அவர்கள் பெயருக்கு மாற்றி பத்திரம் பதிவு செய்து அவரிடம் சென்று கொடுத்தேன்.
ஆனால் அப்போதும் கூட என்னிடம் கோபப்பட்டார்.
எங்கள் இருவருக்கும் நட்பு என்பதையும் தாண்டி வேறு உறவு. அவர் மனதில் எனக்கு தனிஇடம் இருந்தது. போகும்போது தன்னுடைய அடையாளத்தை விட்டுட்டு செல்பவன் தான் சிறந்தமனிதன்.அப்படி விஜயகாந்த் இந்தபூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.