கையில் பணம் இல்லாவிட்டாலும் இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்கலாம் என்ற நிலை இன்று பல நடுத்தர குடும்பங்களில் இருக்கிறது. அப்படி சம்பளத்தை நம்பி இஎம்ஐயில் பொருட்களை வாங்குவது குறித்தும், தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடன் கட்ட முடியாமல் அவதிப்படுவோர் நிலை பற்றியும், பைனான்ஸ் கம்பெனியில் இருந்து கொடுக்கப்படும் டார்ச்சர் பற்றியும் இயக்குனர் சதாசிவம் சின்ராஜ் சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் பொறுப்போடு ஹீரோவாகவும் நடித்துள்ள சதாசிவம் சின்ராஜ், முதல் படம் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி நிச்சயம் தேவை. அவரது மனைவியாக வரும் சாய் தன்யா, காதல் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இ எம் ஐ வசூல் செய்யும் வங்கி ஏஜென்ட்டாக வரும் ஆதவன் நடிப்பு சிறப்பாக உள்ளது. நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றி விடுகிறார்.
பிளஸ் அண்ட் மைனஸ்
கிரெடிட் கார்டு மூலம் தேவையில்லாத பொருட்களை வாங்கி, ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கும் நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு இந்த படம் அவசியம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். பாடல்களும் காமெடியும் படத்தில் பெரிய மைனஸ்.