ரஜினிகாந்த் பிறந்தநாளில் படையப்பா மறுவெளியீடு

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில்,  கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி  வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன்,  மீண்டும் திரையிடப்பட உள்ளது.
1999 ஆண்டில்  கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில்  ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ்,  என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர்.
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியான படையப்பா படம் அன்றைய  காலகட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களைக் கடந்து,  இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன்,  புத்தம் புது பொலிவுடன், டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Comments (0)
Add Comment