நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
அந்தநேரம், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்து ஆட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 இலட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ஆக உள்ளது.
அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்து ஆட்சியர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
அந்த வழக்கு இன்னும் முடியவடையவில்லை. இதனால் ‘வா வாத்தியார்’ வெளியீட்டுக்கான தடை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் இப்படம் டிசம்பர் 12 அன்று வெளியாகாது என படக்குழு அறிவித்துவிட்டது.
வழக்கு முடியாதது ஏன்?
கொடுக்க வேண்டிய மொத்தத் தொகையையும் கொடுக்கவியலாது என்றும் இப்படத்தில் ஒரு பகுதி அதாவது சுமார் நான்கு கோடியைச் செலுத்துவதாகவும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.அதை நீதிமன்றம் ஏற்கவில்லையாம்.
அதை ஏற்று நீதிமன்றம் தடையை விலக்கவில்லை என்றும் படத்தயாரிப்பு நிறுவனத்தால் மொத்தத் தொகையை உடனடியாகப் புரட்ட முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் படத்தின் வெளியீட்டைத் ஒத்திவைத்துவிட்டு,வழக்கை முடிக்க தயாரிப்பு தரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது.