மசாலா விளம்பர நடிகர்களுக்கு மணியார்டர் அனுப்பிய மாணவி!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்குக் கடிதம் எழுதி ஐந்து ரூபாய் மணியார்டர் அனுப்பியிருக்கிறார்.

இந்தி திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ஷாருக் கான், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் ஆகியோர் பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருந்தது ரசிகர்கள், மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. அதைத்தொடர்ந்து, இத்தகைய விளம்பரங்களில் நடித்ததற்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தட்கன் ஜெயின் என்பவர், பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிடுமாறு ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்குக் கடிதம் எழுதி, கூடவே 5 ரூபாய் மணியார்டரும் அனுப்பியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.கல்லூரி மாணவி ஜெயின் தன் கடிதத்தில், “உங்கள் கையிலிருந்து ஒரு பான் மசாலா பாக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காகவே 5 ரூபாய் மணியார்டர் அனுப்பியிருக்கிறேன். ஏனெனில் பான் மசாலா விற்பனையை அதிகரிக்க நீங்கள் விளம்பரம் செய்கிறீர்கள். எனவே நீங்கள் இப்போது எனக்கு பான் மசாலாவை அனுப்ப வேண்டும். நான் இப்போது பான் மசாலாவை சாப்பிடப் போகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. அதுமட்டுமல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் நீங்கள்.
ஆனால், பான் மசாலா விளம்பரங்களில் நீங்கள் நடிப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதைக் கைவிடுமாறு ஏற்கெனவே ட்வீட்டும் செய்திருக்கிறேன். இருந்தும், இதுவரையிலும் எந்த பதிலும் வரவில்லை. சகோதர-சகோதரி தினத்தில் உங்களுக்கு இந்த கடிதம் எழுதுகிறேன். எனக்கு சகோதர, சகோதரிகள் என்று யாரும் இல்லை. உங்கள் இருவரையும் நான் சகோதரர்களாகவே பார்க்கிறேன். அதனால்தான், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் நீங்கள் இந்தியாவின் அடையாளம். நிறைய இளைஞர்கள் உங்களைப் பின்பற்றுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இது பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்துகிறது. அதனால், இந்த விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிடுங்கள்” என மத்தியப்பிரதேசத்தில், பி.ஏ முதலாம் ஆண்டு கல்லூரி பயின்றுவரும் தட்கன் ஜெயின் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயினின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments (0)
Add Comment