பிகில் -கைதி நேரடி மோதல்


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ஒன்பதாவது திரைப்படம் கைதி. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, ராட்சசி ஆகிய படங்கள் படைப்பு ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மூன்றாவது படம் கைதி.

சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கைதி படத்தை, மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64ஆவது படத்தை இவர் இயக்குவதால் கைதி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் நடைபெறும் சம்பவத்தை பின்னணியாக கொண்டு தயாராகியிருக்கும் கைதி படத்தில் பாடல்கள் இல்லை; கதாநாயகி இல்லை; வில்லன் மட்டுமே உண்டு.

தீபாவளி பந்தயத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் மட்டுமே வரும் என்றும்; அதனுடன் போட்டிபோட வேறு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வராது என்றும் கடந்த ஆறு மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கைதி திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்ட போது தமிழ் சினிமா வட்டாரத்தில் இது தேவையா என்று காமெடியாக பேசப்பட்டது. இறுதி நேரத்தில் பின்வாங்கி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தீபாவளிக்கு வந்து விடுவோம் என்று அறிவிக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன், விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் ஆகிய படங்கள் பின் வாங்கிவிட, கைதி மட்டும் பிகில் படத்துடன் தீபாவளி பந்தயத்தில் நேரடியாக மோதுகிறது.

திரையரங்கு உரிமையாளர்களை பொறுத்தவரை தீபாவளிக்கு இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வருவது ஆரோக்கியமான செயல் என்கின்றனர்.

அப்போதுதான் எல்லா திரையரங்குகளிலும் புதிய படங்கள் திரையிடுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒரு படம் மட்டும் வருகின்ற போது படத்திற்கான விலை கூடுதலாக இருக்கும். அதேநேரம் பல திரையரங்குகள் புதிய படத்தை திரையிட இயலாது.

அந்த குறையை கைதி திரைப்படம் போக்கி இருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். 185 கோடி ரூபாயில் தயாராகியுள்ள பிகில், 40 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட கைதி என இரு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் மூத்த விநியோகஸ்தர்கள்.

கைதி படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கைதியின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகள் 15 கோடி ரூபாய்க்கும், கேரளா, கர்நாடகா தெலுங்கு, இந்தி, வெளிநாட்டு விநியோக உரிமைகள் அனைத்தும் 20 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கார்த்தி நடித்து சாதாரண நாளில் வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது.

அந்த வகையில் விஜய் நடித்துள்ள பிகிலுடன் போட்டி என்ற எதிர்பார்ப்புடன் நுழையும்போது கைதியின் வசூல் உயர்வதில் சந்தேகமே இல்லை என்கின்றனர்.

அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி வெளியாகும் வரை எந்தத் திரைப்படம் வசூலில் கலக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலையில், பெட்டியை உடைத்தவர் எஸ்.ஆர்.பிரபு.

அக்டோபர் 25ஆம் தேதி கைதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக 5 மணிக்கு எஸ்.ஆர்.பிரபு அறிவித்ததும், 6 மணியளவில் அக்டோபர் 25ஆம் தேதியே பிகில் திரைப்படமும் ரிலீஸாகிறது என ஏ.ஜி.எஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.