பிகில் தமிழ்நாடு வியாபாரம் வசூல்?

விஜய் நடித்த பிகில் படத்தின் வியாபார விவரங்களை நேற்று(அக்டோபர் 16) பார்த்தோம். தீபாவளி பந்தயத்தில் அதிகமான திரையரங்குகள் திரையிட இருக்கின்ற பிகில் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை 73 கோடி ரூபாய்க்கு ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது விநியோக பகுதி உரிமைகளை அவுட் ரேட், விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது. சென்னை சேலம் ஏரியாக்களின் உரிமை யாருக்கு என்பது இந்தக் கட்டுரை எழுதும் வரை இறுதி செய்யப்படவில்லை.

மற்ற விநியோகப் பகுதியின் விவரங்கள்: செங்கல்பட்டு ஏரியா 18.50 கோடி ரூபாய், மதுரை ஏரியா 11 கோடி ரூபாய், கோவை ஏரியா 14 கோடி ரூபாய், திருச்சி ஏரியா 10 கோடி ரூபாய், வட ஆற்காடு தென் ஆற்காடு ஏரியா 11 கோடி ரூபாய், நெல்லை ஏரியா 5 கோடி ரூபாய் என மினிமம் கேரண்டி அடிப்படையில் வியாபார ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட விலை அடிப்படையில், சென்னை-சேலம் இரண்டு ஏரியாக்களும் சுமார் 18 கோடி ரூபாய் என்ற கணக்கீட்டின்படி; ஆக மொத்தம் 87.50 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டின் அனைத்து ஏரியாக்களும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், தமிழக உரிமையை 73 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கு 14.50 கோடி ரூபாய் நிகர லாபம் என்று கணக்கிட முடியாது.

பிகில் திரைப்படத்தை வாங்குவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு சுமார் 50 கோடி ரூபாய் முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வட்டி வியாபாரத்திற்கான மீடியேட்டர் கமிஷன், பட வெளியீட்டுக்கான செலவு இவற்றை கணக்கிடும்போது படத்தை வாங்கிய நிறுவனத்திற்கு லாபம் என்பது தற்போது இல்லை.

இப்படம் மிகப்பெரிய வசூல் செய்து கொடுக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பங்குத்தொகை வருகின்ற போதுதான் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்திற்கு என்ன லாபம் என்பது தெரியவரும். 87.50 கோடி ரூபாய் முதலீடு விநியோகஸ்தர்களுக்கு கிடைப்பதற்கு சுமார் 108 கோடி ரூபாய் திரையரங்குகளில் முதல் வாரத்தில் வசூல் ஆகவேண்டும். அதன்பின்னர் கூடுதலாக வருகின்ற வசூல் தொகையில் கிடைக்கும் பங்குத் தொகை தான் லாபமாக மாறும்.

தமிழகத்தில் A/C திரையரங்குகளில் மட்டும்தான் 110 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்ய முடியும். திரையரங்குகளில் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்ய முடியும்.

இதனடிப்படையில் பிகில் திரைப்படம் குறைந்தபட்சம் 50 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வசூலானால் மட்டுமே முதலீட்டுத் தொகையை மீண்டும் எடுக்க இயலும்.

தமிழகத்தைப் பொருத்தவரை ரஜினிகாந்த், விஜய், அஜித் நடித்த படங்களை வாங்கிய தொகை கிடைப்பதற்கு, நியாயமான நேர்மையான முறையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்தினால் கிடைக்காது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்துதான் திரையரங்குகளும் திரைப்பட வியாபாரிகளும் தங்கள் முதலீட்டை மீட்டெடுத்து வருகின்றனர்.

இந்த உண்மை நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆளும் அரசாங்கத்திற்கும் தெரியும். நடிகர்களும் இயக்குநர்களும் தங்களது சம்பளத்தை நியாயமான அடிப்படையில் குறைத்துக்கொண்டால் இதுபோன்ற சட்டவிரோதமான முறையில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் திரையரங்குகளுக்கு ஏற்படாது.