மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அந்த தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.இதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார்முன்னதாக, இந்த தொகுதியில் காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குகள் எண்ணப்பட்டபோது, வானதி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோரை விட ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் என்ற அளவில் கமல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதனால் புன்னகையுடனேயே அவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் காணப்பட்டார்.ஆனால், மாலை 5 மணிக்கு பிறகு 22ஆவது சுற்று எண்ணத்தொடங்கியபோது, கமலையும், மயூரா ஜெயகுமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி சீனிவாசன் முன்னேறினார். 25, 26 என கடைசி சுற்று நெருங்கியபோது இரண்டாமிடத்தில் இருந்த கமலை விட அதிக வாக்குகளை வானதி பெற்றதைத் தொடர்ந்து அவரது வெற்றி உறுதியானது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையை முதல் முறையாக பார்க்கும் கமல், ஒரு வேட்பாளராக அந்த அரங்கின் முகவர், வேட்பாளர்கள் அமர ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு வாக்குகள் அறிவிக்கப்படும் தகவலை குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். கடைசி இரு சுற்றுகளின்போது எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாதவராக காணப்பட்ட கமல், தமது கடைசி சுற்று தகவலையும் குறிப்பெடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2018ஆம் ஆண்டில் தொடங்கினார் கமல்ஹாசன்.