கொரோனா பாதிப்புக்கு உலகமெங்கிலும் இருந்து நிதி வந்தபடியே இருக்கிறது. மொத்த பாதிப்பு என்னவென்று கணிக்க முடியாத சூழலில், நிதியுதவி அளிப்பதிலும் கணக்கு பார்க்காமல் சார்புகளின்றி முடிந்தவரையில் அனைத்துத் தரப்புக்கும் நிதியளித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே முதல் நபராக 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்த வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே.கணேசன் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 500 மூட்டைகள் அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை வழங்கியிருக்கிறார். மேலும், இயக்குநர் பாரதிராஜா பெப்சி சங்கத்துக்கு 25 கிலோ எடையுள்ள 50 அரிசி மூட்டைகளை வழங்கியதுடன் மக்களுக்கு சிறு செய்திக் குறிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் மொத்தமாக மூன்று கோடி ரூபாயை கொரோனா பாதிப்பு நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கியிருக்கிறார். அதில் பிரதமர் நிவாரண நிதி, தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா 50 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார். அடுத்ததாக, சினிமாவில் பெப்சி யூனியனுக்கு 50 லட்சமும், டான்சர் யூனியனுக்கு 50 லட்சமும் வழங்கியிருக்கிறார்.
பிகில் திரைப்பட இயக்குநர் அட்லீ பெப்சி யூனியனுக்கு ஐந்து லட்ச ரூபாயும், இயக்குநர் சங்கத்துக்கு 5 லட்ச ரூபாயை நிதியாகவும் வழங்கியிருக்கிறார்.
பிகில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏற்கனவே, பெப்சி சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறது அந்நிறுவனம்.
இதேபோல, பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸின் நிறுவனர் சரவணன் 25 லட்ச ரூபாயை பெப்சி நிறுவனத்துக்கு நிதியுதவியாக அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.