பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,
கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என தமிழில் தொடர்ச்சியாக 5 வெற்றி படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் இந்திய சினிமாவில் பாரதிராஜா மட்டுமே.

தமிழ்த் திரையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்ட பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கார்த்திக், பாண்டியன், ஜனகராஜ், சந்திரசேகர், நெப்போலியன், ராதிகா, ரதி, ரேவதி, ரஞ்சனி, ராதா, ரேகா, விஜயசாந்தி என பாரதிராஜாவின் நடிப்புப் பட்டறையில் உருவான திரைப் பிரபலங்களின் பட்டியல்  நீளமானது, அவரது வழிதோன்றல்கள்தான் தமிழ் சினிமாவில் சாதனையாளர்களாக

இன்றும் நிலைத்துள்ளனர்

வில்லனாக வலம் வந்த சத்யராஜூக்கு கதாநாயகன் வேடம் கொடுத்து முழு நீளக் காதல் படத்தை எடுத்தது, பாரதிராஜாவை தவிர வேறு யாருக்கு​மே வராத துணிச்சல்.

நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி, இசையின் இமயம் இளையராஜா, பாடலின் இமயம் வைரமுத்து ஆகியோருடன் 4வது இமயமாக இணைந்து தமிழுக்கு பாரதிராஜா வழங்கிய முதல் மரியாதை, காலங்களைக் கடந்து இன்றும் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் திரைகாவியம்

இளையராஜாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து அவர் படைத்த கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே ஆகியவை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் மிட்டு அமர்ந்ததிரைகாவியங்கள்.

தமிழ்த் திரை வரலாற்றில் தனக்கென தனி ராஜபாட்டையை உருவாக்கிய கிராமத்து தமிழன் பாரதிராஜாவின் பிறந்த நாள் இன்று.

அதையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து….

மண்ணின்
இருதயத்தை…
கல்லின்
கண்ணீரை…

அரிவாளின்
அழகியலை…
சரளைகளின்
சரளி வரிசையை…

பாவப்பட்ட தெய்வங்களை…
ஊனப்பட்டோர் உளவியலை…

கலாசாரப்
புதை படிவங்களைக்

கலையாத கலைசெய்த
பாரதிராஜாவை
தாதா சாகேப்
பால்கே விருதுக்குப்
பரிந்துரைக்கிறோம்.

நீங்களும்…

இவ்வாறு அவர் வாழ்த்தியிருக்கிறார்.

வைரமுத்து குறிப்பிட்டுள்ள

தாதா சாகேப் விருது என்பது,இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.