முடிவுக்கு வராத விஜய்65 திரைக்கதை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

விஜய் – நெல்சன்  இணையும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது நெல்சன் திலீப்குமார், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான திரைக்கதை வசன வேலைகள் இன்னும் முடியவில்லை என்று சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார். நெல்சன் திலீப்குமாரின் டாக்டர் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்திய நிகழ்வொன்றில், “நெல்சன் திலீப் குமார் ‘டாக்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ஒரே சமயத்தில் செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே நெல்சன், ‘தளபதி 65’ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இன்னும் முடிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் அதை முடித்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும். படக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு ரஷ்யா செல்ல இருந்தார்கள். அது தள்ளிப்போவது இதன்மூலம் உறுதியாகியிருக்கிறது. ஆக, விஜய் 65 படமானது மே மாதத்துக்கு மேல்தான் தொடங்குகிறது