ஒரு கன்னடத் திரைப்படத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகமே பயப்படும் நாள் வரும் என சில வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதைக் கேட்டவர்கள் சிரித்திருப்பார்கள். அவ்வப்போது கிச்சா சுதீப் போன்ற திரைக்கலைஞர்களைக் கொடுத்தாலும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கான படத்தைக் கன்னடத் திரையுலகம் கொடுக்கவில்லை. இதுவே ரசிகர்கள் கன்னட சினிமாவைப் பார்த்து சிரிக்கக் காரணமாக இருந்தது. ஆனால், இதையெல்லாம் உடைத்த ஒரு திரைப்படம் KGF.
KGF திரைப்படத்தின் புகழ் எந்தளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், அந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் பாதி முடிந்திருக்கிறது; ஆனால், அதன் இந்தி திரைப்பட விநியோக உரிமையை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். இப்போது அந்த இந்தி விநியோகஸ்தரை வைத்தே தங்களுக்கான வேலைகளை முடித்துக்கொள்ளப் பார்க்கிறது இந்தி திரையுலகம். அதை தனது பயமாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரு வியாபாரமாக முடிக்கப்பார்க்கின்றனர்.
KGF மற்றும் RRR ஆகிய இரு திரைப்படங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு நம் பணத்தையும், மானத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது இந்தித் திரையுலகம். KGF மற்றும் RRR ஆகிய இரு படங்களையும் வாங்கியிருப்பது நடிகை ரவீணா தண்டனின் கணவர் அனில் தடாணியின் விநியோக நிறுவனமான AA Films. எனவே, படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்று அழுத்தம் கொடுத்து ராஜமௌலியிடமிருந்து அறிவிப்பை வாங்கி வெளியிட்டுவிட்டார்கள்.