நடிகர் அஜித் சமூக வலைத்தளப் பக்கத்தைத் துவங்கியதாக வெளியான அறிக்கைக்கு, அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் பொது அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.
திரைப்படங்களின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர் முதற்கொண்டு அனைத்துவிதமான அப்டேட்களும் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே வெளியிடப்பட்டு வருகிறது. ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும், தனது ரசிகர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதற்கும் பலரும் சமூக வலைத்தளங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
டிவிட்டரில் இல்லாத அஜித், பல நேரங்களில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பதோடு, டிவிட்டர் சண்டைகளுக்கும் காரணமாக மாறிவிடுகிறார். ‘அஜித் சமூக வலைதளங்களை எப்போது பயன்படுத்தப் போகிறார்? அவரது ட்வீட்கள் எப்படியாக இருக்கும்?’ என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் நெடுங்காலமாக நிலவி வருகிறது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்களை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூகஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூகஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டு முந்தைய அறிக்கையை முழுவதுமாக மறுத்துள்ளனர்.
மேலும், “அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்” என்று குறிப்பிட்டு அஜித் வலியுறுத்த விரும்புவதாக சில தகவல்களையும் இணைத்துள்ளனர். அதில்,

1. அவருக்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
2. அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
3. சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.
4. மீண்டும் சமூக ஊடங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.
என்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதன் படி அஜித் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் அஜித்தின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை மூலமாக, அஜித் சமூக ஊடங்களில் இணையப் போவதில்லை என்ற உண்மை உறுதிபடுத்தப்பட்டாலும், அந்த உண்மை அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றதையே தந்துள்ளது.