நேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது

ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தக் கதையை தமிழுக்கு எடுத்துவந்தார். சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால், ஒரு ரீமேக் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, அஜித், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நேர்கொண்டப் பார்வை திரைப்படம் உருவானது. வயதான லுக்கில் அஜித் நடித்திருந்தார். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா மிரட்டியிருப்பார். படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தமிழுலும் பெரிய வெற்றியைப் பெற்றது.

பிங்க் படத்துக்கும் நேர்கொண்டப் பார்வைப் படத்துக்கும் இடையே திரைக்கதையில் சில வித்தியாசங்கள் இருந்தது. தமிழின் உச்ச நடிகர் அஜித் என்பதால், அவருக்கென ஒரு காதல் காட்சிகள், ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்கள் இடம் பெற்றிருந்தது. கதையில் எந்த தொந்தரவையும் ஏற்படுத்தாததால் பிங்க் கொடுத்த தாக்கத்தை நேர்கொண்டப் பார்வை படமும் கொடுத்தது.

மூன்றாவதாக, தெலுங்கு மொழிக்கும் இந்தக் கதை சென்றிருக்கிறது. தெலுங்கு ஸ்டாரான பவன்கல்யாண் மற்றும் நிவேதா தாமஸ் நடிக்க உருவாகிவருகிறது. வக்கீல் சாப் எனும் பெயரில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது. சொல்லப் போனால், டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது வக்கீல் சாப் டிரெய்லர்.

நேர்கொண்டப் பார்வை படத்தோடு ஒப்பிட்டால் வக்கீல் சாப் படத்தில் எக்கச்சக்க மாற்றங்களை கதையில் செய்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கேற்ப ஆக்‌ஷன் காட்சிகளை கொஞ்சமாக சேர்த்தது போல, தெலுங்கில் கொஞ்சம் கூடுதலாக ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்களை சேர்த்திருக்கிறார்கள். அதனால், வக்கீல் சாப் படத்தில் பெப்பர் தூக்கலாக ஆக்‌ஷன் காட்சிகளை படக்குழு இணைத்திருக்கிறார்கள்.

பவன்கல்யானுக்கு மூன்று வருடங்கள் கழித்து வரும் படமென்பதால் ரசிகர்களுக்குத் தேவையானதை தெலுங்கு ரீமேக்கில் கொடுத்தாக வேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றமாம். வணிக ரீதியான அம்சங்கள் இருந்தாலும் படத்தின் கரு சிதையாமல் இருக்கும் என்று படக்குழு கூறிவருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் கொடுத்த வெற்றியை தெலுங்கு வெர்ஷன் தருகிறதா என்பதைப் பொறுத்திருந்தப் பார்க்கலாம்.

– ஆதினி