மொட்டை ராஜேந்திரனின் கதாநாயகன் கனவு நிறைவேறியது

நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகர்களாகி உள்ள நிலையில் பிரபல வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன் புதிய படத்தில் கதாநாயகனாகி உள்ளார். இவர் ‘நான் கடவுள்’ படத்தில் குரூர வில்லனாக வந்து மிரட்டினார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார்.

தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ‘டைம் அப்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் ராஜேந்திரன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம் கதாநாயகன், இன்னொரு வேடம் வில்லன். இந்த படத்தை மனு பார்த்திபன் இயக்கி அவரும் வில்லன், கதாநாயகன் என்று இரண்டு வேடங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த படத்தில் மோனிகா சின்ன கோட்லா, லொள்ளுசபா மனோகர், ஆதித்யா கதிர் ஆகியோரும் உள்ளனர். ஒரு இளைஞனுக்கு கடவுள் பிரதிநிதியாக வருபவர் சில வேலைகளை கொடுத்து 30 நாட்களுக்குள் செய்யாவிட்டால் இறந்து போவாய் என்று சாபமிட அதை நிறைவேற்றி சாபத்தில்இருந்து இளைஞன் மீண்டானா என்பது கதை. இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.