சர்ச்சையை ஏற்படுத்திய மிஷ்கின் படம்

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் தன்மைகளுடன் பணியாற்றி வரும் இயக்குநர் மிஷ்கின் தனது திரைப்படங்களால்பாராட்டு

பெறுவதுடன், சில சர்ச்சைகளிலும் சிக்கி விடுகிறார். ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம் தொடர்பாக நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னை, ‘பேரன்பு’ பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய சர்ச்சைக் கருத்து என அடிக்கடி விவாதப்பொருளாக அவர் மாறிவிடுகிறார். இந்த நிலையில் அவர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘பிதா’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படம் ‘பிதா’. இந்தத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதுடன், அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவருமான மதியழகன் இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் 2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ், நடிகர்கள் கலையரசன், ரமேஷ் திலக், ராதாரவி, உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் போஸ்டர்களிலும் மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களின் லோகோக்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் ‘பிதா’ படத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “எங்களுடைய நிறுவனத்தின் லோகோவை ஸ்ரீ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘பிதா’ திரைப்படத்தின் போஸ்டரில் பார்த்திருந்தோம். அந்தத் திரைப்படத்திற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே இனிமேல் எங்கள் நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் உபயோகிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே போஸ்டரில் மற்றொரு நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்தி ‘பிதா’ திரைப்படம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. விளம்பர உத்தியாக படக்குழுவினர் வேண்டுமென்றே இவ்வாறு செய்து விட்டார்களா? அல்லது இத்தைய குழப்பம் ஏற்பட்டதன் பின்னணி என்னவென்று ரசிகர்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.