கமலா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.பி.மகேஷ் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா படத் தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்றுநடைபெற்றது.
இந்த விழாவில்தயாரிப்பாளர் தனஞ்செயன், பேசுகிறபோது“படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருந்ததோடு, படத்தை பார்க்கும் ஆவலையும் தூண்டுகிறது.
இது ஒடிடி-க்களின் காலம். ஒடிடிகளில் படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதனால்தான் புது புது ஒடிடி நிறுவனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படி வரும் ஒடிடி நிறுவனங்கள் ‘கிரிமினல்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம், மக்களும் இது போன்ற படங்களை விரும்பி பார்ப்பதுதான்.
பொதுவாக ஒடிடி நிறுவனங்கள் பெரிய படங்களைத்தான் வாங்குகிறார்கள். சிறிய படங்களை வாங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் ஒடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களைதான்.நல்ல கதையாக இருந்தால், நடிகர்கள் யார்? என்பதை ஒடிடி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற படமா? என்பதை மட்டும்தான் பார்க்கிறார்கள்.ஒடிடிக்கான மிக சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறும்..” என்றார்.