அரண்மனை – 3 அதிர்வுகளை ஏற்படுத்தி கல்லாகட்டுமா

அவ்னி சினி மேக்ஸ் சார்பாக குஷ்பு சுந்தரின் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை-3’

இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகமும் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது.

இப்படத்தை  ஓடிடியில் வாங்கி வெளியிட கடும் போட்டி இருந்தாலும், படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டுமென இயக்குநர் சுந்தர்.சி விரும்பியதால்  சினிமா பிரபலங்களுக்கு படத்தை திரையிட்டுள்ளார் படம் பார்த்த அனைவரும் குடும்பங்கள் தியேட்டருக்கு வந்து பார்க்ககூடிய படம் என கருத்து தெரிவித்ததாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்தார்

முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில்  இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

முதல் இரண்டு பாகங்களை குழந்தைகளும் ரசித்த நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச் சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் சுந்தர் சி

இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டை இயக்குநர் பீட்டர் ஹெய்னும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரம்மாண்டமான அரங்கத்தில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது என்கிறார் தயாரிப்பாளர் குஷ்பூ சுந்தர்

இப்படத்தைப் வெளியீட்டுக்கு முன்பாகபார்த்தவர்கள்  படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டுகின்றனர்.

படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவைக் காட்சிகளை தியேட்டர்களில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து ரசிப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்

பொதுவாகவே இந்த ‘அரண்மனை’ சீரீஸ் படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம். ‘அரண்மனை-3’ திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதிகமான ஆதரவு கிடைக்கும் என்று படக் குழுவினர்  சொல்கிறார்கள்.

‘அரண்மனை-1’ மற்றும் 2 படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாபாத்திரத்தைவிட ‘அரண்மனை-3’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். ஆர்யாவின்  சினிமா கேரியரில் ‘அரண்மனை-3’ ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.

அதேபோல் இந்த ‘அரண்மனை’ சீரிஸ் படங்களில் இயக்குநர் சுந்தர்.C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதேபோல் ‘அரண்மனை-3’ படத்தில் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சுந்தர்.சியின் கேரக்டர் அமைந்துள்ளதாம். இதேபோல் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நாயகிகளுக்கும் அவரவர் கதாபாத்திரத்திற்கேற்றாற்போல் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.அரண்மனை-3’ வரும் அக்டோபர் 14-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.