வெட்டிபசங்க ஆடியோ வெளியீட்டுவிழாவில் வெடிகுண்டுவீசிய ராஜன்

வெட்டி பசங்க படத்தின் பாடல் வெளியீட்டு விழா17.01.2021 அன்று மாலை சென்னை பிரசாத் பிரிவியு திரையரங்கில் நடைபெற்றது விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள். நடிகை நயன்தாரா தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார். அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி உள்ளது. அவரது மேக்கப் மேன் உதவியாளர்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1½ லட்சம் செலவிட வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார். நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப்பட்டால்தான் சினிமா வாழும். வெட்டி பசங்க படம் வெற்றி பெறும.” இவ்வாறு பேசினார்.
விழாவில் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி@ராமசாமி, செயலாளர் R.ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் சக்கரவர்த்தி,  இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முரளி ராமசாமி பேசும்போது,தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது,
கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர் திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்று விட்டது.ஒரு படம் இரண்டு படம் இசையமைத்து விட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால் மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்து விட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன் என்றார்.
ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
கொரோனா காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றியது சினிமா மட்டும் தான் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அத்தனை தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட்டதற்காக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சாவு வீட்டில் குத்துப் பாட்டு போட்டவர் இப்படத்தின் இயக்குநராக மட்டும்தான் இருக்க முடியும். இப்படம் அறுசுவையும் சேர்ந்து கலந்து கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.
பொருளாதார ரீதியிலும் வெற்றி ரீதியிலும் இப்படம் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்
கவிஞர் சினேகன் பேசும்போது,
மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றிருக்கிறது. ஒரு சினிமா வெற்றியடைந்தால் ஒரு குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் ஒரு குடும்பம் கஷ்டப்படுகிறது. ஒரு படத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது. வெளியே தெரியாமல் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள்.அவரவர் சமூக தளங்களில் இப்படத்தைப் பற்றி பதிவு செய்து வையுங்கள் என்றார்.