ஸ்பின் ஆஃப் ஜானரில் உருவாகும் கொரோனா குமார்படத்தில் சிலம்பரசன்

விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, கார்த்தி நடித்த காஷ்மோரா மற்றும் அன்பிற்கினியாள் ஆகிய படங்களையும் இயக்கிய கோகுல், கொரோனா குமார் என்கிற புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அது தொடர்பாக 2020 ஜூன் 19 அன்று வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பு….

இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான்.நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும் ,ஆதரவும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும் ,சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரதொடங்கியுள்ளோம். நம் பலருடைய வாழ்க்கையில் இந்த கொரோனா வைரஸ் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசயங்களை மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப, இயக்குநர் கோகுல் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தனது படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார்.

“ குமுதா ஹேப்பி அண்ணாச்சி” “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள “ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர்களை பரவசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல்.

அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு கொரொனோவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக உள்ளது.

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, லாக் டவுன் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்கள், காமெடியாக சொல்லவுள்ளோம். இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாகவும் இருக்கும் என்கிறார் இயக்குநர்.

இந்தக் காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது , தனிமைப்படுதுதல் என்று இனம்புரியாத பயத்தை உணர்கிறோம். கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்த கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது.

அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துத் தான் முழுக்க காமெடியாக, சமூகக் கருத்துடன் ‘கொரோனா குமார்’ உருவாகிறது.

இந்தத் திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ்பெற்ற ஸ்பின் ஆஃப் ஜானரில் உருவாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த படமும் ஊரடங்கு மற்றும் தனிமைக் காலங்களில் நடைபெறுகிறது. விரைவில் படக்குழு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் கே.சதீஷ் தயாரிக்கவுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள். மனநெருக்கடி நிறைந்த இந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படம் அதை போக்கும் விதமான தரமான நகைச்சுவை படமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

2020 ஜூன் 19 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது ஆனால் அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் நேற்று(18.09.2021) மாலை வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றும் இப்படம் எஸ்டிஆர் 48 என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதோடு இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது