தியேட்டர் கட்டணம் கூடவும் இல்லை குறைக்கவும் முடியாது – திருப்பூர் சுப்பிரமணி

0
110

கொரோனா 2வது அலை பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 50 சதவிகித இருக்கைகளுடன் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. தியேட்டருக்கு ரசிகர்கள் பாதுகாப்புணர்வுடன் வருவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் 1,100 திரையரங்குகள் உள்ளன. தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளைச் செயல்படுத்த உள்ளோம்.

திரையரங்கப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவிட்டோம். அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தனியார் மருத்துவமனைகளில் எங்களது செலவிலும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இது வரை 90 சதவிகித பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.

தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் அனைவரும் நான் தடுப்பூசி செலுத்தி விட்டேன் என்பதை அறிவிக்கும் விதமாக அந்த வாசகம் அடங்கிய டீ சர்ட் அணிந்து பணியாற்றுவார்கள். அதோடு தியேட்டர் ஊழியர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.

முக்கியமான இடங்களில் சானிடைசர் வைக்கப்படும். ஒவ்வொரு காட்சியின் இடைவெளியிலும் தியேட்டர் முழுக்க சானிடைசர் தெளிக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும், இருக்கைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். எல்லா வகையிலும் ரசிகர்களுக்கு முழு மருத்துவ பாதுகாப்பு வழங்குவோம்.

தற்போதைய சூழலில் தமிழில் அரண்மனை -3, சிவக்குமார் சபதம், லாபம், பிளான் பண்ணி பண்ணனும், உள்ளிட்ட தமிழ் படங்களும், பெல் பாட்டம் இந்தி படமும், கான்ஜுரிங் 3 ஆங்கில படமும் திரையிட தயாராக உள்ளது.

வருகிற வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களை பொறுத்து தியேட்டர்கள் படிப்படியாக திறக்கப்படும். மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் உடனடியாக திறக்கப்பட்டு விடும். தியேட்டர்களில் இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும்.

டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கொரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில் 100 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here