பணத்துக்காக அலையும் நடிகர்கள்- சுந்தர் சி

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி.

இவர் இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள்.

அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் வெற்றிக்கு பிறகு   சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா நடிப்பில் ‘அரண்மனை-3’  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா  இசையமைக்கிறார்.ஆர்யா, ராஷிகண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று காலை(10.10.2021) சென்னைபிரசாத் பிரிவியூதியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பேசும்போது, இந்தப் படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன். இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது பேய் படத்தில் எப்படி நடிக்கிறதுன்னு தெரியவில்லையே என்று கூறினேன். அது மிகவும் ஈசிதான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப் பெரிய ரசிகன். இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா .இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது…என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசும்போது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர்.சி, குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை -3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் C.சத்யா பேசும்போது, இந்த படம் எனக்கு 25-வது படம். இந்தப் படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்த லாக் டௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படத்தின்  மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன… என்றார்.

நடிகர் மனோபாலா பேசும்போது, குஜராத்தில்  40 நாட்கள்  தங்கியிருந்து படப்பிடிப்பு முடித்தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு சூட்டிங் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம். படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது… என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படங்கள்தான். படத்தை பார்க்கின்ற சிறுவர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

அரண்மனைபடத்தின் 2 பாகங்களும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால், உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில் நுட்பக் குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

அரண்மனை படத்தின் முதல் 2 பாகங்களைவிடவும் இந்த அரண்மனை-3 படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் சொல்வார்கள் “அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள்” என்று..! ஆனால் அது மிகவும் கஷ்டம்.

இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களைவிட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும்.

அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரங்கள்தான்.

அரண்மனை பாகம்-1-ஐ உதயநிதிதான் வெளியிட்டார். தற்போது இந்த அரண்மனை-3படத்தையும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்தப் படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான்.

அரண்மனை-1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை-3படத்தைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறதுஎன்று சொன்னவரும் அவர்தான்.

இப்படத்தில் ஆர்யா உள்ளிட்ட சிறந்த நடிகர்கள்எனக்குவாய்த்திருக்கிறார்கள். ஆர்யா, தயாரிப்பாளர்களின் நடிகர். இந்த நிமிடம்வரை பிஸினஸ்வரை இன்வால்வ் ஆகி அக்கறையுடன் கேட்பார், உதவி செய்வார். பெரிய பக்க பலமாக இருக்கிறார். நடிகராகவும் சிறப்பாக பணி புரிந்தார். கடுமையான காட்சிகளைக்கூட புன்னகையுடன் எதிர்கொள்வார்.

நிறைய நடிகர்கள் மொத்த சம்பளத்தில், எண்பது சதவிகிதத்தை வாங்கிக் கொண்டு, எப்படா படப்பிடிப்பு முடியும் என நினைத்து ஓடுவதிலேயே இருப்பார்கள். ஆனால் ஆர்யா அப்படி அல்ல. பிஸினஸ்வரையிலும் உடன் இருந்தார்..என்றார்.