மும்பையில் நடுக்கடலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்த அந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 8 பேரைப் பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் உள்ளிட்டோர் மும்பை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆரியன் கானின் செல்போனை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாங்கி ஆய்வு செய்தனர். ஆரியன் யார் யாருடன் பேசினார், என்பது பற்றி விசாரித்தனர். பின்னர் ஆரியன் கான், அர்பாஸ் சேத் வணிகர் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சிக்கலில் அரசியல் இருக்கிறதாம். உண்மை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில்,
இந்தி நடிகரின் மகன் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீரென வந்து கப்பலில் போதைப் பொருளை பறிமுதல் செய்ததாகக் கூறுகின்றனர்.
அவர்கள் உண்மையான பிரச்சினையை திசைதிருப்புகின்றனர். உண்மைபிரச்சினைஅதானி
அந்த போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டது. இந்த நேரத்தில் அதைப்பற்றி ஊடகத்தினர் ஒளிப்பரப்புவார்கள் என போதை தடுப்புப் பிரிவு இங்கும், அங்கும் சிலரை பிடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்மூலம் அதானி துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சிக்கலைத் திசைதிருப்பவே ஷாருக்கான் மகன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணி நடிகரின் மகனை சிக்கலுக்குள் இழுத்துவிட்டால் ஊடகங்களின் கவனமும் மக்களின் கவனமும் அதில் போய்விடும் என்று திட்டமிட்டே இதைச் செய்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிறது.