தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் ஆகிய பணிகளை செய்வதற்கு தமிழக அரசிடம் அதிகாரபூர்வ அனுமதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவை சொல்வதாக கடந்த இரு வாரங்களாக அமைச்சர் கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் செயல்படும் என்று கூறி மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 18) காலை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகிணி R.பன்னீர் செல்வம் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நேரில் இந்த மனுவைக் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இத்துடன் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்
கொள்வோம் என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்
அவைகள்,
1. பார்வையாளர்கள் திரையரங்கில் நுழைவதற்கு முன் நுழைவாயிலில் அவர்களுடைய கைகால்களை சோப்பு நீரால் கழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதன் பின்னரே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
2. பார்வையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அதனை பின்பற்றாதவர்கள் அரங்கின் உள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. பார்வையாளர்களுக்கு நுழைவாயிலில் நான் காண்டாக்ட் தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். தகுதியானவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.
4. திரையரங்கின் உள்ளே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அதற்குரிய எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
5. ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன் கிருமிநாசினி வளாகம் முழுமையும் தெளிக்கப்படும். இதன் காரணமாக ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னர் 45 நிமிட இடைவெளியில் காட்சிகள் தொடங்கப்படும்.
திரைத்துறை சம்பந்தபட்ட பிற பணிகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கினாலும் திரையரங்கம், மால் போன்ற அடர்த்தியாக மக்கள் கூடக்கூடிய தொழில்களை தொடங்க அனுமதி அளிப்பதற்கு உலகம் முழுவதும் ஆளும் அரசுகள் இதுவரை தெளிவான முடிவுக்கு வரவில்லை. அதே நிலை தான் தமிழகத்திலும் நிலவுகிறது.
இது சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் பேசிய போது, “தமிழகத்தில் 60% தியேட்டர்கள் குத்தகைதாரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. 20% மால் தியேட்டர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எஞ்சியுள்ள தியேட்டர்களை மட்டுமே உரிமையாளர்களே நடத்தி வருகின்றனர்.
தியேட்டர்களை குத்தகைக்கு நடத்தி வருபவர்கள் உடனடியாக திரையரங்கை மீண்டும் திறப்பதற்கு விருப்பமின்றி உள்ளனர். இந்த மாத இறுதியில் பருவ மழை தொடங்கிவிடும். இதன் காரணமாக பார்வையாளர்கள் குறைவாகவே வருவார்கள். 60 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது .
மீண்டும் திறக்க பராமரிப்பு பணிகளுக்கு செலவு செய்ய வேண்டும். தியேட்டருக்கு பார்வையாளனை பயமின்றி படம் பார்க்க கொண்டு வருவதற்கு மிகப்பெரும் முயற்சி – பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இதனை திரையரங்குகள் மட்டும் செய்துவிட இயலாது.
தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் குறைந்தபட்ச பார்வையாளன் தியேட்டருக்கு வருவான்.
தமிழகம் முழுவதும் தியேட்டர் திறக்கப்படும் நாளன்று முண்ணனி நடிகர்கள் நடித்த குறைந்த பட்சம் 3 படங்களாவது வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பு ரசிகரும் தியேட்டருக்கு முதல் நாள் வருவார்கள்” என்கின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி விட்டு தீபாவளிக்கு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கலாம் என்கின்றனர்.