படப்பிடிப்புக்கு அரசிடம்அனுமதி கேட்கும் தயாரிப்பாளர்கள்

முழுமை அடையாமல் பாதியில் முடங்கிப் போயிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புப் பணிகளுக்கு அனுமதி வேண்டி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வருமானத்திலும், வரவேற்பிலும் தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டமாக இருக்க வேண்டிய கோடை காலத்தை கொரோனா தலைகீழாக மாற்றியுள்ளது. 60 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெறாததோடு திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. திரையுலகினரின் கோரிக்கைகளை ஏற்று போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி வேண்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் சார்பில் T. சிவா, இயக்குநர் மனோபாலா, PL.தேனப்பன், JSK.சதிஷ் குமார், G.தனஞ்செயன், R.K.சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் இணைந்து அளித்த மனுவில், “தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகளை 16-3-2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.

தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகள் மட்டும் 11-5-2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே திரைப்படங்களைத் தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோன்று ‘தமிழ் திரைப்படத தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி’யின் சார்பாக எஸ்.வி.சேகர், என்.ராமசாமி என்கிற முரளி இராம நாராயணன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஜெயின், மைக்கேல் ராயப்பன், சுபாஷ் சந்திர போஸ், கே.ஜே.ஆர் ஆகியோர் இணைந்து படப்பிடிப்பு பணிகளைத் துவங்க அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “கடந்த வாரம் தாங்கள் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். அதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது பல கோடி ரூபாய் புழங்கும் தமிழ் திரை உலகில் அத்தனை கோடி ரூபாயும் முடங்கிப் போயுள்ளது.தொழிலாளர் தோழர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.

ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிலைமையை தாயுள்ளத்தோடு பரிசீலித்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு உடைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெறுவது போல, இங்கும் நாங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களும், திரைப்படத் தொழிலாளர்களும் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்கி நடத்துவதற்கு ஆணை பிறப்பித்து திரையுலகினரின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தருமாறு தங்களை இருகரம் குவித்து பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.