சமூக இடைவெளியை பின்பற்ற தயாராகும் படப்பிடிப்புகள்

ஒரு பெரிய சுகாதார பேரழிவை கட்டவிழ்த்து விட்டதிலிருந்து பெரும்பாலான மக்களை ஒரே இரவில் வேலையில்லாமல் ஆக்கியது வரை, கொரோனா வைரஸ் சரிசெய்ய முடியாத பல சேதத்தை இந்த தேசம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கிற்குப் பின், நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை பல்வேறு தொழில்துறைகள் சந்திக்கவுள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாத இடத்தில் இருக்கிறோம். சினிமாவும் அதில் விதிவிலக்கல்ல. சினிமா மக்களால் உருவாக்கப்பட்டு மக்களுக்கு படைக்கப்படும் ஒரு வெகுஜன கலை. படைப்பு ரீதியாகவும், வணிக கட்டமைப்பிலும் ஒருவர் மற்றவரை அதிகம் சார்ந்து இயங்கும் ஜனநாயகத்தன்மை சினிமாவின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றது. அவ்வாறான கலை, இனி சமூக இடைவெளி, நெருங்கி வேலை பார்க்க முடியாத சூழல் என மக்களை குழுக்களாக கூட அனுமதிக்காவிட்டால், சினிமாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

அண்மையில் இது குறித்த விவாதம் ‘ஜூம் மீட்டிங்கில்’ நடந்தது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த திரைப்படப் பிரிவுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தை நடத்தினர். இதில், லாக்டவுன் முடிந்து மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டவுடன், நடைமுறைக்கு வரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா சார்பாக, இந்த விவாதத்தில் CINTAA(சினிமா மற்றும் டிவி கலைஞர்களின் அசோசியேஷன், மும்பை) அவுட்ரீச் கமிட்டி இணை செயலாளரும் தலைவருமான அமித் பெஹ்ல் பங்கேற்றார்.

படப்பிடிப்புக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கு இந்தியா ஏன் மற்ற நாடுகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதை இந்த மீட்டிங்கில் வலியுறுத்தி பேசிய பெஹ்ல், “இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாடு, படப்பிடிப்புக்கு வெளிநாடுகள் செல்வதால், சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். அதே போல வெளிநாட்டு படப்பிடிப்பு குழுக்களும் இங்கு வருகின்றன.

நாம் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு உலகளாவிய நட்புறவை, புரிதலை பெற வேண்டும். மீண்டும் இது போன்ற நீண்ட இடைவெளி நடந்தால், நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க விரும்புகிறோம், ஆனால் வாழ்க்கையை பணயம் வைத்து அல்ல” என்றார்.

விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கியமான அம்சம் சினிமா நெருக்கம்(cinematic intimacy). சினிமாவில் நெருக்கமான காட்சிகள் படமாக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் ஆலோசிக்கப்பட்டது.

செட் மற்றும் பிற வழிகாட்டுதல்களில் ஒரு பொதுவான நடைமுறையாக வைராலஜிஸ்டுகள் இருப்பதும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பெஹ்ல் மேலும் கூறுகையில், “நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டுதல்கள் (நிறுவப்பட்டவை) அரசாங்கங்கள் மற்றும் மாநில நகராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படும்” என்றார்.

சரிகமா இந்தியாவின் துணைத் தலைவர் சித்தார்த் ஆனந்த்குமார், தனது வெப்சீரிஸில் நெருக்கமான காட்சிகளைக் காண்பிப்பதற்காக தொழில் நுட்பத்தை முயற்சிக்க முடிவு செய்துள்ளார். ஜூலை மாதம் ஒரு வலைத் தொடரை படமாக்க திட்டமிட்டுள்ள இவர், நெருக்கமான காட்சிகள் கதைக்களத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மிட் டேவுக்கு பேட்டியளித்த அவர் குறிப்பிட்டுள்ளார் . இருப்பினும், நடிகர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, சித்தார்த் இதுபோன்ற காட்சிகளை முன்கூட்டியே படமாக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் முத்தக் காட்சியை சித்தரிக்க பிளாக்கிங் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், திரைப்படங்கள் கொரோனாவுக்கு முன்பு நாம் விட்டுச் சென்றதைப் போலவே இனி இருக்காது என்பது மட்டும் தெளிவாக புலப்படுகிறது.