அக்காலிக்காக பாழடைந்த பங்களா செட்

பிபிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் உகேஷ்வரன் தயாரித்துள்ள படம், ‘அக்காலி’. இதில், ஸ்வயம்சித்தா தாஸ், ஜெயக்குமார், வினோத் கிஷன், நாசர், ‘தலைவாசல்’ விஜய், வினோதினி, தாரணி ரெட்டி நடித்துள்ளனர். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிஷ் மோகன் இசையமைத்துள்ளார். முகமது ஆசிப் ஹமீத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “அக்காலி என்பது பஞ்சாப்பில் சில பகுதிகளில் பேசப்படும் வழக்கு மொழி. இறப்பில்லாத மனிதன் என்று பெயர். இந்தக் கதையில் அப்படி ஒருவர் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். அதனால் இந்த தலைப்பை வைத்தேன். இதுபற்றி கதையில் விளக்கம் வரும். இது த்ரில்லர் படம். பில்லி சூனியத்தை நம்பும் ஒரு கும்பலை தேடும் கதைதான் படம். பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். தோட்டா தரணி இந்த அரங்கத்தை வித்தியாசமாக அமைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சி அங்கு 2 வாரங்கள் படமாக்கப்பட்டன. ஸ்வயம்சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் வழக்குதான் படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.