இராவண கோட்டம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கண்ணன் ரவி குரூப் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.இந்தப் படத்தின் நாயகனாக சாந்தனுவும், நாயகியாக ஆனந்தியும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சஞ்சய் சரவணன், முருகன்(லூசிபர் புகழ்) மற்றும் தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தயாரிப்பு –  கண்ணன் ரவி, எழுத்து, இயக்கம் – விக்ரம் சுகுமாரன், ஒளிப்பதிவு – வெற்றிவேல் மகேந்திரன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், பாடல்கள் – ஏகாதசி, கார்த்திக் நேத்தா, கலை இயக்கம் – நர்மதா தேவி, ராஜூ, புகைப்படங்கள் – பாவை ஜி.டி.ரமேஷ், நடன இயக்கம் – பாபி ஆண்டனி, சண்டை இயக்கம் – ராக் பிரபு, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, டி ஒன்., சதீஷ்.2013-ம் ஆண்டில் வெளிவந்த ‘மதயானை கூட்டம்’ என்ற படத்தின் மூலம் தன்னை நிரூபித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன், 10 ஆண்டுகள் கழித்து தந்திருக்கும் அடுத்த படம் இது.‘மதயானைக் கூட்டம்’ போடி பகுதியில் வசிக்கும் கள்ளர் இனத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இடையில் நடந்த ‘மகாபாரதப்’ போர். ஆனால் இந்த ‘இராவண கோட்டம்’ படம் இரண்டு வெவ்வேறு சாதியினரைச் சேர்ந்தவர்களுக்குள் நடக்கும் ‘இராமயணப்’ போர்.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம், வறட்சி பிரதேசமாகவும், ‘தண்ணியில்லாத காடு’ என்றும் இன்றளவும் அழைக்கப்படுகிறது. கோடை காலங்களில் அந்த மாவட்ட மக்கள் தண்ணீருக்காக அலைந்து திரிவதெல்லாம், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து நடக்கும் அவலம் இது.அதேபோல் அதே இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிக்க சாதி என்ற முக்குலத்தோர் சாதியினருக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையே பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே மோதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயிருக்கும் கிராமம் ஏனாதி. இந்தக் கிராமத்தில் உள்ள மேலத் தெருவில் ஆதிக்க சாதியினரும், கீழத் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்களும் வசித்து வந்தாலும், இன்றுவரையிலும் இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.மேலத் தெரு மக்களின் தலைவராக இருக்கும் ‘போஸ்’ என்ற பிரபுவும், கீழத் தெருவின் முக்கிய பிரமுகரான ‘சித்ரவேல்’ என்ற இளவரசுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரின் நட்பால் இப்போதவரையிலும், ஊருக்குள் சாதி ரீதியாக பிரச்சினை வராமல் இருந்து வருகிறது.அதே சமயம் அந்த ஊரில் அரசியல் கட்சிக்குத் தடை விதித்திருக்கிறார்கள். எந்தவொரு அரசியல் கட்சியின் கொடியும் அந்த ஊரில் இல்லை. அரசியல்வாதிகளையும் அனுமதிக்கவில்லை.மேலத் தெருவைச் சேர்ந்த சாந்தனுவும், கீழத் தெருவின் இளவரசுவின் மகனான சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்கள். சாந்தனு தனது சொந்த அத்தை மகளான ‘இந்திரா பிரியதர்ஷினி’ என்ற ஆனந்தியைக் காதலித்து வருகிறார். இந்தக் காதல் சஞ்சய்க்கு தெரியாது.ஊர் எம்.எல்.ஏ.வான அருள்தாஸை கைக்குள் வைத்துக் கொண்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான தேனப்பன் ஊருக்குள் ஒற்றுமையாய் இருக்கும் இரு சாதி மக்களிடையே மோதலைத் தூண்டிவிட பார்க்கிறார். இந்தத் தூண்டிவிடும் பிரச்சினைக்கு அருள்தாஸின் அல்லக்கையும், சஞ்சய்யின் தாய் மாமனான முருகன் தானே பொறுப்பேற்கிறார்.சஞ்சய்யைத் தூண்டிவிட்டு ஆனந்தி அவனைக் காதலிப்பதுபோல செட்டப் செய்து, கடைசியில் ஆனந்தியை சாந்தனு தட்டிச் சென்றுவிட்டதாக சஞ்சய்யின் காதில் ஓத.. சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருக்கும் சஞ்சய்க்குள் சாத்தானின் வேதம் வீரியமாக இறங்க.. சாந்தனுவுக்கும், சஞ்சய்க்கும் இடையில் மோதல் பிறக்கிறது.இன்னொரு பக்கம் அந்த ஊரில் கிடைத்திருக்கும் கனிம வளங்களை குறி வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்க காத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் கருவேல மரங்களை அழித்துவிட்டால் வானம் பொய்த்துக் கொண்டு பெய்து மழை பெய்து நீர் ஆதாரம் பெருகிவிடும். அதன் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கே கால் வைக்க முடியாது என்றெண்ணி கருவேல மரங்களை வெட்டும் முயற்சியை தடுக்கிறது மாவட்ட நிர்வாகம்.இந்த நேரத்தில் பிரபு, இளவரசு இருவரையும் ஒரே நேரத்தில் படுகொலை செய்யும் எம்.எல்.ஏ. தரப்பு ஊருக்குள் சாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டு செய்ய.. தனலாய் தகிக்கிறது ஏனாதி கிராமம். இதன் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘இராவண கோட்டம்’ படம்.இதுவரையிலும் தான் ஏற்றிருக்காத ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் சாந்தனு. அது அவரது உடல்வாகு, தோற்றப் பொலிவு, நடை, உடை, பாவனை என்று அத்தனையையும் தாண்டியது. இருந்தும், கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் நடிகர் சாந்தனு.ஆனந்தியிடம் காட்டும் ரொமான்ஸ்.. சஞ்சய்யிடம் காட்டும் நட்பு, அக்காவிடம் காட்டும் பாசம், பிரபுவிடம் காட்டும் மரியாதை.. எம்.எல்.ஏ.விடம் காட்டும் கோபம், ஊர்க்காரர்களிடம் காட்டும் நேசம் என்று அத்தனையிலும் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தனது நடிப்பினை முடிந்த அளவுக்குக் காண்பித்திருக்கிறார் சாந்தனு. பாராட்டுக்கள்!எப்போதும் அப்பாவியாய் தோற்றமளிக்கும் ஆனந்தி, இந்தப் படத்திலும் அம்மாவிடம் மட்டும் அப்பாவியாய் நடித்துவிட்டு காதலனிடம் “இப்பவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று டார்ச்சர் செய்யும் காதலியாக நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் சஞ்சய், சாந்தனு இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பை மட்டும் கணமாகக் கொடுத்திருக்கிறார்.சஞ்சய் சரவணன் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்தான். முறைப்பு வரும் அளவுக்கு கோபம் இவருக்குக் கை கூடவில்லை. ஊர்த் தலைவரான போஸ் என்ற  கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் நடிகர் பிரபு. “ஊருக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று கர்ஜித்தவர் அதேபோல் உயிரையும் விடுகிறார்.இவருடைய நண்பரான இளவரசு, தனது நண்பரையும் விட்டுக் கொடுக்காமல் தனது சொந்த மக்களையும் விட்டுக் கொடுக்காமல் சமாதானப் புறா வேலையை மட்டும் நிறைவாக செய்திருக்கிறார்.2 காட்சிகளில் தீபாவின் நடிப்பு அசத்தல். ஆனந்திக்கு நடக்கும் சடங்கு நிகழ்ச்சியிலும், ஆனந்தியை சாந்தனு டூவீலரில் அழைத்து வரும் காட்சியின்போதும் தனது இயல்பான நடிப்பினால் வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார். இந்தக் காட்சியை படமாக்கியிருக்கும்விதமும் பாராட்டுக்குரியது.2 காட்சிகள் என்றாலும் தனது தனித்த குரலாலும், உடல் மொழியாலும் கலெக்டராக நடித்திருக்கும் ஷாஜி தனித்து தெரிகிறார்.வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ராமநாதபுரம் வட்டாரத்தின் வறண்ட பூமி அப்படியே நம் கண் முன்னே நிற்கிறது. பல ஏரியல் ஷாட்டுகளிலும், கருவேல மரங்களின் பிரம்மாண்டத்தைக் காட்டும்போதும் பாராட்ட வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இறுதிக் காட்சியில் இரவு நேர சண்டை காட்சிகளில் பிரம்மாண்டமும், படக் குழுவினரின் கடின உழைப்பும் தெரிகிறது. சண்டை இயக்குநருக்கு இதற்காகவே ஒரு தனி பாராட்டு..!ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் அதிக கவனம் கொடுத்து இசைத்திருக்கிறார் போலும். அதிலும் தந்திர வேலை செய்யும் முருகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதிலும் தனது பின்னணி இசை மூலமாக கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜஸ்டின். பாடல்கள் அதிகம் ஈர்க்கவில்லையென்றாலும் பாடல் காட்சிகளை ரசிக்கும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.இதுவரையிலும் பார்த்திருக்காத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஊர்த் தோற்றம், இதில் மேலத் தெரு, கீழத் தெரு என்ற பிரிவு.. ஊருக்குள் பிரபுவிற்கு இருக்கும் மரியாதை.. கீழத் தெருவில் இருக்கும் இளந்தாரிகள் எழுப்பும் எதிர்க் குரல், சாந்தனு, சஞ்சய் சரவணனின் நட்பு, சாந்தனு-ஆனந்தி காதல் காட்சிகள், ஊர்த் திருவிழா, திருவிழாவின் முளைப்பாரி இடுவதில் துவங்கி, கடைசியாக வயலில் கரைப்பதுவரையிலும் என்று பலவற்றிலும் டீடெயிலாக முதற்பாதியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அமைச்சர், எம்.எல்.ஏ.வின் உள்குத்து விளையாட்டுக்கள், முருகனின் திருவிளையாடல்கள், சாந்தனு-சஞ்சயின் திடீர் மோதல், காதலியுடன் பிணக்கு, பிரபு, இளவரசுவின் மரணம், தொடர்ந்து எழும் மோதல்கள் என்று பிற்பாதியில் படத்தை நிறைவு செய்யும் நோக்கில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், முருகனின் சித்து விளையாட்டைத் தவிர மற்றவைகளில் புதுமையும், ரசிப்பும் இல்லை என்பதுதான் உண்மை.இறுதியாக, “சாதிய மோதலைத் தூண்டிவிட்டு குளிர் காய்வது அரசியல்வியாதிகள்தான்” என்று தைரியமாக டைட்டில் கார்டே போட்டு உண்மையை  உடைத்திருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாறனுக்கு நமது பாராட்டுக்கள்.இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இந்தப் பாராட்டைப் பெறுவதற்குத் தகுதியானவர்தான் என்றாலும் இதற்காகத் திரைக்கதையில் இவர் செய்திருக்கும் சாதி ரீதியிலான அடையாளங்களும், கதாப்பாத்திரங்களின் குண நலன்களும் கேள்விக்குரியதாக உள்ளது.சாதிப் பிரச்னையும், அரசியலும் வேறு, வேறு இல்லை என்பதை இந்தப் படம் சொல்ல வந்தாலும், சொல்லியவிதம் ஒரு சாதியை மட்டும் தூக்கிப் பிடிக்கும்வகையில் உள்ளது.மேலத் தெரு பிரபு நெற்றியில் பட்டையடித்து தீவிர பக்தராக, சிறந்த மனிதராக கண்ணுக்குத் தெரிய, அவரது ஆரூயிர் நண்பரான கீழத் தெரு இளவரசு டாஸ்மாக் கடையில் சரக்கடித்துவிட்டு சலம்பல் செய்யும் குணாதிசயம் கொண்டவராக இருக்கிறார். இதுவே முதல் சறுக்கல். மேலத் தெருவின் தலைவருக்கும், கீழத் தெருவின் தலைவருக்குமான வித்தியாசத்தை இயக்குநர் இப்படி காட்டியிருப்பதே நமக்கு நெருடலாக உள்ளது.மேலும் பிரபுவை காட்சிக்குக் காட்சி விதந்தோதும் கதாப்பாத்திரமாகவே இளவரசுவின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது, பிரபு சார்ந்த சமூகத்தை கீழத் தெருவை சேர்ந்த தலைவரை வைத்தே உயர்த்திப் பிடிக்கும் இயக்குநரின் எண்ணமாகவே தோன்றுகிறது.வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவகாரம் தொடர்பான பஞ்சாயத்தில் பிரபுவிடம் எதிர்க்கேள்வி கேட்கும் தன் சாதி இளைஞர்களிடத்தில் “வெள்ளக்காரன் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு.. தங்க இடம் கொடுத்து, வேலையும் கொடுத்து, கூலியும் கொடுத்து வாழ வைச்சவ பரம்பரைடா இவங்க..” என்று பிரபுவைக் கை காட்டி சொல்கிறார் இளவரசு. இதற்கு கீழத் தெரு இளைஞர், “இதையே காலம் பூரா சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?” என்று திருப்பிக் கேட்கிறார்.இது இரு தரப்பினரின் கருத்தையும் சம அளவில் பதிவு செய்வதுபோல தெரிந்தாலும், இந்தக் காட்சியின் இறுதியில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு பிரபு, இளவரசுவை பார்த்து “போதும் விட்ருப்பா…” என்று கையெடுத்து கும்பிடுகிறார். உடனேயே பதறும் இளவரசு, “நீ ஏம்பா என்னைக் கும்பிடுற..நாங்கதாம்பா உங்க கால்ல விழுந்து கும்பிடணும்..” என்கிறார்.கீழத் தெருக்காரர்கள் தங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அதை ஏற்காமல் “மேலத் தெருக்காரர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே வாழுங்கள்…” என்று இளவரசு கதாப்பாத்திரம் மூலமாக இயக்குநர் சொல்வதெல்லாம், நடுநிலைமை தவறிய திரைக்கதை.மேலும் அரசியல்வாதிகள் செய்யும் சதித் திட்டத்துக்கு ஊரிலேயே கீழத் தெருவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இணைந்து போகிறார்கள் என்பதாகவும் திரைக்கதை அமைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் காட்சிகளெல்லாம் பிரபுவின் சாதியை உயர்த்தியும், இளவரசுவின் சாதியை தாழ்த்தியும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஒரு கதாசிரியராக நடந்த சம்பவங்களை சொல்லும்போது நடந்ததை அப்படியே சொல்லலாம். ஆனால் கற்பனை கதை என்னும்போது இரு தரப்பினருக்கும் பொதுவாக நடுநிலைமையாக இருந்துதான் காட்சிகளை வடிவமைத்து, வசனங்களை எழுதியிருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் இந்தப் படத்தில் நடுநிலைமை தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.திரைக்கதையின்படி பார்த்தால் முதலில் இருந்து கடைசிவரையிலும் பிரபுவின் மேலத் தெருவில் ஒரு கெட்டவர்கூட இல்லை என்பதும், இளவரசுவின் கீழத் தெருவில் ஒரு நல்லவர்கூட இல்லை என்றுதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..!?மேலும் படத்தின் துவக்கக் காட்சியில் பிரபு கேரக்டரை அறிமுகப்படுத்தும்போது அவரது பின்னணியில் பல அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் தெரிகின்றன. இதில் பிரபாகரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர், பகத்சிங், பெரியார், அப்துல்கலாம் என்று வரிசையாக இருக்க.. தமிழகத்தின் தனிப்பெருந் தலைவரான காமராஜர் புகைப்படம் மட்டும் இல்லை.முதுகளத்தூர் இம்மானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவரை கைது செய்து சிறையில் அடைத்தவர் அப்போது முதல்வராக இருந்த காமராஜர் என்பதால் அவர் மீது இனம் புரியாத, தவறான புரிதலுடன் தேவரின மக்கள் இப்போதுவரையிலும் கோபத்தில் இருக்கிறார்கள்.அப்படியொரு கோபத்தில் இருக்கும் தேவரின மக்களில் இயக்குநர் விக்ரம் சுகுமாறனும் ஒருவர் என்பதாக நாம் இதை எடுத்துக் கொள்ளலாம். வேறு வழியில்லை.ஆனால், இப்படி இன்றைய இளம் தலைமுறையை திசை திருப்பி வைத்திருப்பது ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளுக்குள் பிழைப்பு நடத்தி வரும் அரசியல்வியாதிகள்தான் என்பதையும் கடைசியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஏன் இந்த முரண்பாடு இயக்குநரே..!?இரு சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தில் சாதி கலவரத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் அரசியல்வாதிகள்தான் பிரச்னை என்று நகர்ந்த திரைக்கதையை மட்டுப்படுத்துவதுபோல கருவேல மரம் வெட்டுதல், கனிம வளம், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை என்று திசை மாற்றி படத்தை இரண்டாம் பாதியில் குளோஸ் செய்துவிட்டார் இயக்குநர்.  இதனாலேயே சாந்தனு – ஆனந்தி காதல், சாந்தனு சஞ்சய் மோதல், சாதியை வைத்து ஊரைப் பிரிக்க நினைக்கும் வில்லன்கள், கருவேலமரம் – கார்ப்பரேட் அரசியல் என இரண்டாம் பாதி திரைக்கதை காட்சிக்குக் காட்சி பல்வேறு கிளைகளாகப் பிரிந்து சென்றுவிட்டது. இந்தத் துண்டு, துண்டு காட்சிகளால் நமக்கு எந்தவித சுவாரஸ்யமும் கிட்டவில்லை.இதனாலேயே பிரபு-இளவரசு மரணம்கூட பார்வையாளர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை. இரு சமூகத்தினரும் சேர்ந்து அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் பாடம் கற்றுக் கொடுப்பதுபோல் படத்தை முடித்திருந்தால்கூட நிச்சயமாக பாராட்டியிருக்கலாம். ஆனால் “அரசியல்வியாதிகள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்” என்று சொன்னதோடு படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.நடுநிலைமையோடு அணுகியிருக்க வேண்டிய கதையை இயக்குநர் தன் சுய சாதிப் பற்றால் ஒரு சார்பாக கொண்டுபோய்விட்டதால் அரசியல்வியாதிகள் மீது விழ வேண்டிய பழி, மேலத் தெருக்காரர்கள் மீது விழுந்துவிட்டது. இது தீர்க்க முடியாத களங்கம்.!இயக்குநர் விக்ரம் சுகுமாறன், ‘மதயானை கூட்ட’த்தில் பெற்றெடுத்த நற்பெயர், இந்த ‘இராவண கோட்ட’த்தில் காலியானதுதான் உண்மை..!