உயிருடன் இருக்கும் பொழுதே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டால் பிரச்சனைகள் வராது. ஆனால் இருக்கும்வரையிலும் சொத்துக்களை பிரிக்காமலும், பாகப்பிரிவினை செய்யாமல் இறந்து போகும் அம்மா அப்பா இருவரின் பிள்ளைகளும் கடைசியாக அந்தசொத்துக்களுக்காக அடிதடி, வெட்டு, குத்து கொலைவரையிலும் செல்வது தமிழ்நாட்டில் தினமும் நடக்கிறது.
அது போன்ற ஒரு கதையில் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த ஜானரில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.சிவராமன்.
தொழில் அதிபரான பதம் வேணுகுமார் திடீரென்று இறந்து போகிறார். அவருடைய ஊரில் இருக்கும் அவருடைய சொத்துக்களை சரி பாதியாக அவருடைய இரண்டு மகன்களுக்கும் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் சென்னையில் அவருக்கு இருக்கும் ஒரு பிளாட் வீட்டை மட்டும் ஷ்ரத்தா என்ற பெண்ணுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
அந்த ஷ்ரத்தா யார் என்று பதம் வேணு குமாரின் மகன்களுக்கே தெரியவில்லை. இப்போது அந்த பெண் யார் என்று கண்டுபிடித்து அவரிடம் இருந்து வீட்டை வாங்குவதற்கு பதிலாக நாமே ஒரு பெண்ணை செட் செய்து இவர்தான் ஷ்ரத்தா என்று கோர்ட்டில் நிரூபித்து அந்த வீட்டைக் கைப்பற்றி விடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள் மகன்கள்.
அந்த நீதிமன்றத்தில் பாதுகாப்பு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் விக்ராந்தை அழைக்கும் சோனியா அகர்வால் இந்த வழக்கு பற்றிய விஷயங்களை சொல்லி உண்மையான ஷ்ரத்தா யார் என்பதை தேடி கண்டுபிடித்து தன்னிடம் கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இதை விதார்த் ரகசியமாகவே செய்ய வேண்டும் என்கிறார். நீதிபதியின் உத்தரவுக்கு ஏற்ப சிங்கிள் மனிதராக இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டு விசாரிக்க துவங்குகிறார் விக்ராந்த்.
இன்னொரு பக்கம் பிர்லா போஸ் ஒரு மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்டில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் இல்லாத நபர்கள் முழு நேர வேலை பார்ப்பதாக சொல்லி அவர்களுக்கு கோடிக்கணக்கான சம்பளத்தை யாரோ பெற்று வந்திருக்கிறார்கள் என்பது காவல்துறைக்கு புகாராக வந்திருக்கிறது. இது குறித்து விசாரித்த போலீசார் இதில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை கண்டறிகிறார்கள்.
அந்த நேரத்தில் கம்பெனி பணத்தில் ஏழரை லட்சம் ரூபாய் பிர்லா போஸூக்கு வந்திருப்பதை கண்டறிகிறார்கள். உடனடியாக அந்த ஏழரை லட்ச ரூபாயை திருப்பி கட்டினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நிறுவனமும் காவல் துறையும் சொல்ல ஏழரை லட்ச ரூபாயை தேடிக் கொண்டிருக்கிறார் பிர்லா போஸ்.
அந்த நேரத்தில் விக்ராந்த் அந்த வீட்டுக்குள் நுழைந்து உண்மையான ஷ்ரத்தா பிர்லா போஸின் மகள்தான் என்பதைக் கண்டறிகிறார். அவர் தற்போது திருமணமாகி கோத்தகிரியில் இருப்பது தெரிய வர ஷ்ரத்தாவை தேடி சென்று விசாரிக்கிறார் விக்ராந்த்.
இதன் பின்பு என்ன நடந்தது..? எதற்காக ஆள் மாறாட்டம் செய்தார்கள்? இந்த ஷ்ரத்தாவுக்கும், தொழிலதிபர் பதம் வேணு குமாருக்கும் என்ன தொடர்பு..? அந்த பிளாட் வீட்டை ஷ்ரத்தாவின் பெயரில் எதற்காக பதம் வேணுகுமார் எழுதி வைத்தார்?… போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதான் வில் படம் .
கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லராக இந்தப் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.சிவராமன் இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழக்கின் முடிச்சுகள் அவிழ்த்து கொண்டிருக்க கடைசியாக தெரிய வரும் உண்மை நிச்சயம் நம் மனதை தொடுகிறது.அந்த வகையில் இந்தப் படம் நிறைய லாஜிக் ஓட்டைகளை வைத்திருந்தாலும் மனதை கனமாக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை.
சோனியா அகர்வாலுக்கு இதுவும் ஒரு சாதாரண திரைப்படம்தான். அவரால் எந்த அளவுக்கு நடிக்க முடியுமா… அந்த அளவுக்கு மட்டுமே தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார். அவ்வளவுதான். விக்ராந்துக்கும் இத்திரைப்படம் அவருடைய எண்ணிக்கையில் ஒன்றை கூட்டி இருக்கிறது அவ்வளவுதான்.
பிர்லா போஸ், பதம் வேணுகுமார், மோகன் ராமன், ஷ்ரத்தாவாக நடித்த அலேக்யா,.. இவர்கள்தான் திரைப்படத்தை முழுமையாக தாங்கி இருக்கிறார்கள்.
பிர்லா போஸ் தான் வாங்கிய பணம் மிகப் பெரிய சுமையாக கழுத்தை நெரிக்கிறது என்பதை உணர்ந்து ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக தன்னால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து ஒரு பரிதாப உணர்வை காட்டி இருக்கிறார்.
மோகன் ராமன் இரண்டு காட்சிகளே என்றாலும் தன்னுடைய மகனை நினைத்து அவர் வருத்தப்படும் அந்த ஒரு காட்சியில் நமக்குப் பாவமாகத் தெரிகிறார்.
அப்பாவுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அலேக்யா தன்னுடைய தோழியின் உதவியோடு தொழிலதிபர் பதம் வேணு குமாரை சந்திக்கும் காட்சியிலும், அதற்குப் பிறகு அங்கே நடக்கின்ற காட்சிகளிலும், நடந்ததை நினைத்து கண்ணீர் விடும்போதும் நம்முடைய பாராட்டுக்களை பெறுகிறார்.
ஷ்ரத்தாவாக நடித்துள்ள அலேக்யாவின் நடிப்பு இந்தப் படத்தை இடைவேளைக்கு பின்பு நம்மை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அவருடைய செயல் மிக மிக தவறு. எப்போதும் நமது மனம் சரி, தவறு என்ற இரண்டு பக்கத்திலும் சாயும் நிலையில்தான் இருக்கும். எந்தப் பக்கத்தில் இருந்து அழுத்தம் நமக்கு கிடைக்கிறதோ நிச்சயம் அந்தப் பக்கம் நாம் சாய்கிறோம். அதைத்தான் அலேக்யாவும் இந்தப் படத்தில் செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னா வேணு பவன் குமாரின் வீட்டில் நடக்கின்ற காட்சிகளுக்கு மட்டும் அபாரமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். மற்றைய காட்சிகளில் கோத்தகிரியில் நடக்கும் காட்சிகள் மற்றும் நீதிமன்ற காட்சிகளிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
செளரவ் அகர்வாலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசையை கொஞ்சம் கவனிக்கத்தக்கது போல இசைத்திருக்கிறார்.
கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லராக இந்தப் படம் திசை மாறும்போது அந்தக் காட்சிகளை ஆபாசமாக நீண்டு விடாமல் கொஞ்சம் தடுத்து ஒரு திரில்லர் டைப்பில் காட்சிகளை வெட்டி ஒட்டி கொடுத்திருக்கிறார் எடிட்டர் ஜி.தினேஷ்.
படத்தின் கடைசி 10 நிமிடங்கள்தான் இத்திரைப்படத்தின் உயிர் நாடி. அதை இன்னும் கொஞ்சம் மக்கள் மனதில் பதிவது போல உணர்வுபூர்வமாக எடுத்திருக்கலாம். இப்போது எடுத்தவரையிலும் இந்தப் படம் பரவாயில்லை. ஒருமுறை பார்க்கலாம் என்ற ரீதியில்தான் அமைந்திருக்கிறது.