குழலி – விமர்சனம்

இப்படி ஒரு படம் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு என்று நினைக்க வைக்கும் படம். மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும், உணர்ச்சியுமாகப் பதிவு செய்திருக்கிறார் குழலி படத்தின் இயக்குனர் சேரா.கலையரசன்.தென் மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. டைட்டில் போடும்போது அந்த கிராமம் என்ன விதமான சாதிய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராட்ட எண்ணத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.அதன் பிறகு வளவளவென்று நீட்டிக் கொண்டிருக்காமல் நேரடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞன் ‘விக்னேஷு ‘ம், தங்கள் சாதியை உயர்த்தி பிடிக்கும் வழக்கமுள்ள குடும்பத்து ‘ஆரா ‘வும் பால்ய வயதிலிருந்து நட்புடன் இருந்து, பார்வையில் காதலை வளர்த்துக் கொள்ளும் பதின்பருவ நிலையில் இருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களுக்குள் காதலை மீறிய கல்வித் தகுதியும் மேற்படிப்பு படிக்க, குறிப்பாக மருத்துவராகி கிராமத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற துடிப்பும் இருக்கிறது.அதனால் காதலுக்கு சாதி தடையாக இருந்தது என்கிற வழக்கமான கதையை மீறி இவர்கள் கல்விக்கும் எப்படி சாதி தடையாக இருக்கிறது என்பதைச் சொன்னதில் இயக்குனர் வேறுபட்டு நிற்கிறார்.அந்த விஷயமே பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டதுடன் பரிசுகளையும் வென்று வந்துள்ளது.சலசலக்கும் ஓடைகள், சாரல் மழை, பச்சை போர்த்திய வயல்வெளிகள், தோட்டங்கள் என்று படம் முழுவதும் வளமை கொட்டிக் கிடைக்கிறது. அவற்றை உடமையாக்கிக் கொண்டோர் அங்கே வேலை செய்வதற்காக தாழ்த்தப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறையில் கோவில் விழாக்கள் மற்றும் திருமண உறவுகளில் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது பகை.இந்தச் சூழலில் விக்னேஷ் ஆராவின் காதலும் கல்வியும் என்ன ஆயின என்பதுதான் கிளைமாக்ஸ்.வாலிப வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை ‘ விக்னேஷுக்கு இந்தப் படம் சிறப்பான வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது. வயலில் ஆரா மயக்கம் போட்டு விழுந்ததைப் பார்த்ததும் தங்கள் கிராம கட்டுப்பாட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அவளைத் தோளில் தாங்கி, கீழே விழுந்து விடாமல் துண்டால் இருகக் கட்டி வைத்தியரிடம் வண்டியில் கொண்டு வரும் வேகத்தில் திகைக்க வைக்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் அவருக்கு நடிப்பு கை கொடுப்பது போல், நடனக் காட்சிகளிலும் அவரது நடனத் திறன் ‘ கால்’ கொடுக்கிறது.‘ஆரா ‘வும் அப்படியே. பருவம் கொப்பளிக்கும் பள்ளி இறுதி மாணவியாக வரும் அவர், அந்தப் பாத்திரத்தில் அச்சில் வார்த்தது போல் பொருந்திப் போகிறார்.அந்த முகத்தில் தெரியும் அப்பாவித் தனமும், வெள்ளந்திச் சிரிப்புமே, அழகியாக அவரைக் காட்டுகிறது. கள்ளமில்லாத முகமும், களங்கமில்லாத மனமுமாக வரும் ஆராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. விக்னேஷின் அப்பாவாக வரும் அலெக்ஸும் ஆராவின் தாயாக வரும் செந்தியும் பண்பட்ட நடிகர்கள் என்பதால் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.விக்னேஷின் நண்பர்களாக வரும் இளைஞர்களும் கொஞ்சம் கூட கேமரா கூச்சம் இல்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்கள். அதுவும் உயரத்தில் மாற்றுத்திறன் கொண்ட அந்த இளைஞர் வரும் காட்சிகள் எல்லாம் அவரது குறைவில்லாத நகைச்சுவைத் திறனை எடுத்துக் காட்டுகின்றன. அவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.கே.பாக்யராஜ் படத்துக்கு பிறகு அதிகமான தாய்க்கிழவிகள் வருவது இந்த படமாகத்தான் இருக்கும். அத்தனை பாம்படக் கிழவிகளை எப்படித்தான் பிடித்தாரோ இயக்குனர்?அந்தக் கோவில் கலை விழா நடனம் சற்று நீளமான காட்சியாக வருகிறது என்றாலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமலும், கிராமத்து நேட்டிவிட்டியுடனும் அமைந்திருப்பது இயக்குனரின் அனுபவத் திறமைக்குச் சான்று.சமீரின் ஒளிப்பதிவும், டி.எம்.உதயகுமாரின் இசையும் கலந்து கட்டி நம்மை புது இரத்தம் பாய்ந்த எண்பதுகளில் படம் பார்க்கும் அனுபவத்துக்கு இட்டுச் செல்கிறது. அதுவும் உதயகுமாரின் இசையில் பாடல்களும் சரி எந்த இடத்தில் பின்னணி இசை வரவேண்டும், எந்த இடத்தில் வெறுமை நிலவ வேண்டும் என்று தெரிந்து ஆர் ஆர் அமைத்திருக்கும் பாங்கும் சரி ரசித்து லயிக்க வைக்கிறது.பதைபதைப்புக்கு நம்மை இட்டுச் செல்லும் கிளைமாக்ஸ், அப்படி நடந்து விடக்கூடாது என்று உண்மையிலேயே திரில்லாக இருக்கிறது. ஒரு சிறிய நம்பிக்கையுடன் படம் முடிந்திருந்தால் இன்னமும் இந்தப் படத்தை ரசித்திருக்க முடியும்.அதேபோல் தங்களுக்குள் இருக்கும் காதலை விட கல்வியே பெரிது என்பதை விக்னேஷும் ஆராவும் தங்கள் பெற்றோரிடமோ, ஊர் உலகத்திடமோ, நம்மிடமே கூட இன்னும் அழுத்தமாக தெரிவித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.எல்லா சாதிய கொடுமைகளும் நடந்து கொண்டிருந்தும் பள்ளிகளில் இன்னும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஆசிரியை சொல்லிக் கொடுக்க அதை கோரசாக மாணவர்களும் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை கேலிக்குரியது என்று விளக்கி இருப்பது இயக்குனரின் குரலாக ஒலிக்கிறது.