டேனியல் பாலாஜி நினைவு நாளில் ஆர்பிஎம் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில்அவர்கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி  இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
 இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக்  நிறுவனர்-  தொழிலதிபர் பாஸ்கரன், ‘எம் ஆர் டி மியூசிக்’ முருகன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர்,  தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில்,
” இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை.
படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்..  எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி  தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அப்போது’நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?’ என கேட்டார். கேளுங்கள்,தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன்.
‘தண்ணீர் தண்ணீர் ‘ எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய ‘கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..’ என்ற பாடலை பாடுமாறு கேட்டார்.அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலவில்லை.
‘சிங்கார வேலனே’ என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.
அவர் மிகுந்த திறமைசாலி.  சினிமா நுணுக்கங்களை பற்றியும்… நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர். அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும்.
அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்.‌ அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும்.
இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை.  நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் ‘ஆக்சன்’ என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் – நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது என்றார்.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில்,
” அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள்.
டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன்.
அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை.
அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.