தர்பார் வாட்ஸ்ப்பில்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் திரைப்படம் ‘வாட்ஸ் அப்’பில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடித்திருந்த தர்பார் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியானது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை வெளியான தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படம் குறித்த தவறான தகவல்கள் சில வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்டு வந்தது.
அத்துடன் முழு திரைப்படமும் பல பார்ட்களாக வாட்ஸ் அப்பிலேயே பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் சைபர் க்ரைம் போலீஸுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘லைகா புரொடக்‌ஷன்ஸ் என்னும் எங்கள் நிறுவனம் தயாரித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தத் திரைப்படத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.

 உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் எங்கள் படத்தை வெளியிட்டுள்ளோம்.
தற்போது, எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் உள் நோக்கதோடு ‘யாரும் தர்பார் படத்தைத் திரையரங்குக்குச் சென்று பார்க்க வேண்டாம்’ என்று வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது தயாரிப்பு நிறுவனமான எங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய இழப்பை உருவாக்கும் விதத்தில் உள்ளது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கையால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் புகார் மனுவை அவசரமாகக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று லைகா நிறுவனம் காவல்துறைக்குப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.