மூக்குத்தி அம்மன் முடிவுக்கு வருகிறதா?

படப்பிடிப்புதொடங்கி 44 நாட்களில் 90 சதவிகிதப் படப்பிடிப்பை முடித்துக்கொண்டுசென்னைதிரும்பியிருக்கிறது மூக்குத்தி அம்மன் படக்குழு.

நயன்தாரா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டபோது படத்துக்கு ஏறிய மவுசும், எனர்ஜியும் குறையாமல் ஷூட்டிங்கை முடித்திருக்கின்றனர்.

 இயக்குநர்ஆர்.ஜே.பாலாஜியிடம், இந்த அதிவேக ஷூட்டிங் குறித்து கேட்டபோது  ஐசரி கே.கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும்போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பதுதான்.
இன்னும் ஒரே ஒரு வாரத்தில் சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் என்.ஜே.சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இந்தப் படத்துக்காகத் தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.
இந்தக் கதாபாத்திரத்துக்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்துப் பணிபுரிந்திருக்கிறார். இந்தப் படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
மேலும் அவரது கதாபாத்திரம் படத்துக்குப் பெரும் பலமாகவும் இருக்கும்” என்றார்.தயாரிப்பாளராகப் பணத்தைக் கொடுத்தோம், ஏதாவது படத்தை எடுத்துக்கொண்டு வரட்டும் என்றில்லாமல், ஷூட்டிங்கின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணித்து அனைத்துத் தேவைகளையும் படக் குழுவினருக்குச் செய்து கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்தப் படம் குறித்து பேசியபோது, “ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு இந்தப் படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சரியம். ஆர்.ஜே.பாலாஜியும் அவர் குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும்தான் இதற்குக் காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராகப் பல காலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையைச் சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது, அதை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்குப் பிடித்தவராக இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
நயன்தாரா இந்தப் படத்துக்குக் கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அவர் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும்” என்றார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார்.

‘அவருடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.