நவம்பர் 15-ம் தேதி வெளியாக இருந்த அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மழை காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர்15) வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒருவாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும். படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ளார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை திருமலை தயாரித்துள்ளார். மழை என்பதை காட்டிலும் ஏற்கனவே திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் அமரன், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் கங்குவா ஆகிய இரண்டு படங்களை கடந்து புதிய படங்களுக்கு தியேட்டருக்கு பார்வையாளர்கள் வரமாட்டார்கள் என்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்திருக்கிறது என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.
Prev Post