திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 நாட்களுக்கும் மேலாக அவை முடங்கிப் போயிருக்கும் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரையுலகினர் பலரும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிலர் தங்கள் படங்களை நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் துவங்கினர்.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஜூலை 16 அன்றுசில ஊடகங்களில்செய்திகள் வெளியானது. கொரோனா பாதிப்புகள் குறைந்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் திரையரங்குகளைத் திறக்கத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று ஜூலை 17 மாலைசெய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருக்கும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “திரையரங்குகளை பொறுத்தவரையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை திறக்கப்படவில்லை. ஏனென்றால் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் தான் அதிக அளவிலான மக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. நோயின் தாக்கம் குறையும்பட்சத்தில் பொதுமக்கள் நன்மையை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும்.” என்று தெரிவித்தார்.

மேலும், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.