நினைவெல்லாம் நீயடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான் நினைவெல்லாம் நீயடா.

நாயகன் பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார். விருப்பப்படி வாழமுடியாமல் கட்டாயத்துக்கு வாழ்கிறோமே என்கிற தன்னிரக்கத்தையும் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பது அவருக்குப் பலம், பார்வையாளர்களுக்கு கனம்.

பல வருடங்கள் நாயகனைக் காத்திருக்க வைத்த நாயகியாக நடித்திருக்கிறார் சினாமிகா.திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பையும் தோற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனை மணக்கும் மனிஷாயாதவ் வேடம் பரிதாபத்துக்குரியதாகிறது.காட்சிகளில் கண்ணீர் என்றாலும் பாடல்காட்சியில் அவரை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நாயகன் நாயகியரின் பள்ளிப்பருவத் தோற்றத்தில் நடித்திருக்கும் ரோகித், யுவலட்சுமி ஆகியோர் அளவாக நடித்திருக்கிறார்கள்.

நகைச்சுவைக்காக ரெடின் கிங்ஸ்லி இருக்கிறார்.கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து சிரிக்க வைக்கிறார். ஆசிரியராக நடித்திருக்கும் மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், யாசர், அபி நட்சத்ரா ஆகியோர் தங்கள் வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜாபட்டாச்சார்ஜி, படத்தை வண்ணமயமாகக் காட்ட உழைத்திருக்கிறார்.அதேசமயம் கதையில் இருக்கும் சோகத்தைக் காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளையராஜா இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் நிறைவு.

சாகாவரம் பெற்ற காதல் உணர்வை அடிப்படையாக எடுத்துக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்.
காதல் போயின் சாதல் என்கிற கருத்துக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.முதல்காதல் கைகூடவில்லையெனினும் அதைக் கடந்து ஒரு பெரிய வாழ்வு இருக்கிறது என்பதை விரல்நீட்டிச் சொல்லாமல் மனதில் பதிய வைத்திருக்கிறார்.