இட்லி கடை திரைப்பட விமர்சனம்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? என்கிற பாடலுக்குத் திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கும் படம் இட்லிகடை
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் தனுஷ்,தொழில் நிமித்தமாக வெளிநாடு  செல்கிறார்.போன இடத்தில் பணக்கார முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினிபாண்டேவுடன் திருமண வாய்ப்பு என அடுத்தடுத்து ஏறுமுகத்தில் இருக்கிறார்.அந்த நேரத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வு காரணமாக சொந்த ஊர் திரும்பும் நாயகன் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார்.அதற்கு பல இடையூறுகள்.அவை என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என கதை விரிவடைகிறது.

நாயகனாக நடித்திருக்கும் தனுஷ் வெளிநாட்டில் கோட் சூட் போட்டுக் கொண்டு வலம் வரும்போதும், கிராமத்தில் வேட்டி சட்டையுடன் நடமாடும்போதும் கம்பீரமாக வருகிறார்.

மனிதர்களின் ஆழமன உணர்வுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில்  வேடமேற்று அதற்குத் தக்க நடித்து நினைத்ததைச் சாதித்திருக்கிறார்.

கிராமத்து நாயகியாக நித்யாமேனன், இவர் நிஜமான கிராமத்துப் பெண் என்று சொன்னால் அனைவரும் நம்பிவிடுவார்கள்.அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.

நவநாகரிக ஷாலினிபாண்டே நடிப்பிலும் மிளிர்கிறார்.

தனுஷின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண் படத்தின் ஆதாரம்.அவர் மூலம் சொல்லப்படும் கருத்துகள் அவர் சொல்வதாலேயே பலம் பெறுகின்றன.

தனுஷின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

தொழிலதிபராக இருக்கும் சத்யராஜ் அந்த வேடத்திற்கு இயல்பாக பொருந்துகிறார்.அவருடைய மகனாக நடித்திருக்கும்அருண் விஜய்,

தனுஷுக்குவில்லன்.நடிப்பில் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்.இடைவேளைக் காட்சி ரசிக்க வைக்கிறது.

பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க வேடங்கள்.சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவில் காட்சிகளில் நேர்த்தி.வெளிநாட்டு நகரம் தேனி கிராமம் ஆகியன அதனதன் அழகுகளோடு பதிவாகியிருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம்.பின்னணி இசையில் திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் தனுஷ்.

இடைவேளை வரை விறுவிறுப்பாகச் செல்கிறது படம்.இரண்டாம் பாதியில் வேகம் குறைகிறது அதனை ஈடுகட்டும் வகையில்அங்கும் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளை வைத்து சமன் செய்ய முயன்றிருக்கிறார்.