கான்சிட்டி- திரைப்பட விமர்சனம்

பவர்ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில்  வெளிவந்துள்ள ஸ்கேம் வகையிலான திரைப்படம் கான் சிட்டி. ஏமாற்றுகிறவர்களைவிட ஏமாறுகிறவர்கள்தான் குற்றவாளிகள் என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை .
அர்ஜூன்தாஸ் – அன்னாபென் இருவரும் மங்களூருக்கு அருகே சிறு உணவகம் ஒன்றை நடத்துகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வடிவுக்கரசியும் யோகிபாபுவும். அன்னா பென் மகன் அகிலனை தினமும் பள்ளிக்குச் சென்று விட்டுவரும் வேலையைச் செய்கிறார் அர்ஜூன்தாஸ்.
ஒரு நாள் பள்ளியில் இருந்து மகன் அகிலன் கடத்திச் செல்லப்படுகிறான்.  அவனை கடத்திச் சென்றவர் யார் என்பதை அறியும் தருணத்தில், முழு குடும்பமும் அதிர்ச்சியில் உறைகிறது. ப்ளாஸ்பேக்கில் இவர்கள் எல்லாம் யார், என்ன செய்தார்கள், சிறுவனை எதற்காக, ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தில் சுவாரசியமாக நகரும் திரைக்கதை.
 கொள்ளை அடிப்பதே முழுநேர வேலையாக அலையும் அர்ஜூன்தாஸ் அண்ட் கோவின் சம்பவங்கள் வாய்விட்டுச்சிரிக்கவைக்கின்றன.
பல படங்களில் நாம் அச்சமூட்டும் வில்லனாக பார்த்த அர்ஜூன்தாஸ், இந்தப் படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். மெல்லப் பேசுகிறார். செய்யும் காரியங்கள் எல்லாம் உலக மகா மோசடிகள்.
கான் சிட்டியை லாஜிக் இல்லாத மேஜிக் என்று சொல்லலாம்.
மின்சார வாரிய அலுவலகத்தில் அடிக்கும் கொள்ளை தொடங்கி கிளைமேக்ஸ் வரை நூதன மோசடிகள் தொடர்கின்றன. சில மோசடிகளை ஒரே நாளில் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு
இன்று தொழில்நுட்பம் முன்னேறி இருக்கிறது. ஆனால், படத்தில் எல்லாவற்றையும் மறந்து நாம் சிரிப்போம்.
குடும்பமே கொள்ளையடிக்கிற குடும்பமாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்படம். அப்பாவியாக இருந்துகொண்டு அன்னாபென் செய்யும் வாடகை மோசடி அப்பாடா என்றிருக்கிறது. இப்படியும் நடக்குமா என்பதைவிட இப்படித்தான் நடக்கிறது என்பது புரியும்.
மின்வாரிய அதிகாரியாக விடிவி கணேஷ் நடிப்பில் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. அதேபோல அருள்தாஸ். ஹோட்டல் முதலாளியாக இமான் அண்ணாச்சி. எல்லா கேரக்டர்களையும் நினைவில் நிற்கவைத்திருக்கிறார் இயக்குநர். வில்லன் போலீஸ்காரராக நடித்துள்ள நந்தகோபால் கதாபாத்திரம் புதுரகமாக இருக்கிறது.
யோகிபாபுவம் அவரது தாயான வடிவுக்கரசியும் சேர்ந்து செய்யும் அனுதாப கொள்ளைகள் சிரிப்பின் உச்சம். நாம் அன்றாடம் பார்க்கும் சம்பவங்கள்  வேற லெவல் மோசடிகளாக உருவெடுத்துள்ளன. பணக்காரனாக ஆசைப்படும் நடுத்தரவர்க்கம் கோடிகளை சுருட்ட நினைத்தால் என்ன நடக்கும் என்பதை சுவையான காட்சிகளின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் தன்மைக்கு உதவியாக இருக்கின்றன. எந்த கதையைச் சொன்னாலும் ரசிக்கும்படி சொல்லவேண்டும் என்பதை புத்திசாலித்தனமான இயக்கத்தின் வழியாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஹரீஸ் துரைராஜ்.